தமிழக காவல்துறையைச் சேர்ந்த ஐ.ஜி. ஒருவர் மீது பெண் காவல் கண்காணிப்பாளர் கொடுத்த பாலியல் குற்றச்சாட்டு குறித்து, தமிழக அரசால் அமைக்கப்பட்ட விசாகா கமிட்டி விசாரித்து வருகிறது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
தமிழக காவல்துறையில் பணியாற்றும் பெண் அதிகாரிகள், காவலர்கள், பெண் அரசு ஊழியர்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் குறித்து விசாரணை செய்வதற்காக விசாகா கமிட்டி செயல்பட்டு வந்தது. இந்தக் கமிட்டியின் உறுப்பினர்கள் ஓய்வு பெற்றதால், அது செயல்பாடு இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில், அந்தக் கமிட்டி தமிழக காவல்துறை ஏடிஜிபி சீமா அகர்வால் தலைமையில் செயல்படும் என தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை அரசாணை வெளியிட்டது. இந்தக் கமிட்டியில் ஏடிஜிபி அருணாச்சலம், டிஐஜி தேன்மொழி, ஓய்வு பெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சரஸ்வதி, டிஜிபி அலுவலக மூத்த நிர்வாக அதிகாரி ரமேஷ் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் , ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ள அதிகாரி ஒருவர் தனக்கு பாலியல் கொடுமை செய்ததாக தமிழக காவல்துறையின் காவல் கண்காணிப்பாளராக பணிபுரியும் ஒரு பெண் அதிகாரி இந்த கமிட்டியில் புகார் தெரிவித்துள்ளார். இந்த புகார் குறித்து விசாரிக்க அந்த கமிட்டிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பெண் அதிகாரி புகார்: அந்த பெண், தமிழக காவல்துறையின் உள்ள ஒரு சிறப்புப் பிரிவில் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். அதே பிரிவில் ஐ.ஜி.யாக பணிபுரியும் அதிகாரி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம். முக்கியமாக அந்த பெண் அதிகாரியின் செல்லிடப்பேசிக்கு ஆபாச புகைப்படம், ஆபாச விடியோ காட்சிகளை ஐ.ஜி.அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதை அந்த பெண் அதிகாரி கண்டித்துள்ளார். இதற்கிடையே கடந்த 1-ஆம் தேதி ஒரு வழக்குத் தொடர்பாக ஆலோசனை செய்ய ஐ.ஜி.யின் அறைக்கு, அந்த பெண் அதிகாரி சென்றுள்ளார். அப்போது பெண் அதிகாரியின் தனிமையை பயன்படுத்தி, ஐ.ஜி. தவறாக நடக்க முயன்றாராம். இதில் ஐ.ஜி.யிடம் இருந்து தப்பிய அந்த பெண் அதிகாரி அழுதபடி, அந்த அறையில் இருந்து வெளியேறி இருக்கிறார்.
ஐ.ஜி.மிரட்டல்: மேலும் இந்த விஷயத்தை வெளியே கூறினால், உன்னைப் பற்றிய ஆண்டு ரகசிய அறிக்கையில் தவறான தகவல்களை எழுதுவேன் என பெண் அதிகாரியை ஐ.ஜி. மிரட்டினாராம். ஏற்கெனவே மிகுந்த மனவேதனையில் இருந்த அந்த பெண் அதிகாரிக்கு, ஐ.ஜி.யின் இந்த நடவடிக்கை மேலும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த பெண் அதிகாரி, அப்பிரிவின் ஏடிஜிபி.யிடம் கடந்த 3-ஆம் தேதி இதுதொடர்பாக ஆதாரங்களுடன் புகார் செய்துள்ளார். மேலும் அன்றைய தினத்தில் இருந்து அந்த பெண் அதிகாரி, மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார். இந்நிலையில், அவரது புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது.
விசாகா கமிட்டி விசாரணை: இதைத் தொடர்ந்து அந்த பெண் அதிகாரி, சில நாள்களுக்கு முன்பு தமிழக காவல்துறை டிஜிபி தே.க.ராஜேந்திரன் மற்றும் தமிழக உள்துறை, முதல்வரின் தனிப்பிரிவு ஆகிய இடங்களில் புகார் மனு அளித்தார். இந்தப் புகாரின் மனுவில் அடிப்படையில் விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்கும்படி மாநில உள்துறை, விசாகா கமிட்டிக்கு பரிந்துரை செய்தது. இதனால், இந்த விவகாரம் குறித்து ஓரிரு நாள்களில் விசாகா கமிட்டி விசாரணையை தொடங்கும் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இந்த விசாரணையில் ஐ.ஜி. மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் தமிழக காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









