
ஆனைமலையாறு - நல்லாறு திட்டம்: பிரச்னையைத் தீர்க்க முயற்சி: மத்திய அமைச்சர் உறுதி
ஆனைமலையாறு-நல்லாறு திட்டம் தொடர்பாக, தமிழக-கேரள மாநிலங்களுக்கு இடையே நிலவும் பிரச்னையைத் தீர்க்க மத்திய அரசு முயற்சி மேற்கொள்ளும் என்று மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர்

கெüசிகா நதி மேம்பாடு தொடர்பான வரைபடத்தைப் பார்வையிடுகிறார் மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் . உடன், சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர்.
கோவை: ஆனைமலையாறு-நல்லாறு திட்டம் தொடர்பாக, தமிழக-கேரள மாநிலங்களுக்கு இடையே நிலவும் பிரச்னையைத் தீர்க்க மத்திய அரசு முயற்சி மேற்கொள்ளும் என்று மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உறுதி அளித்துள்ளார்.
நீர் நிலைகள் பாதுகாப்பு, நீர் மேலாண்மை தொடர்பாக அரசு அதிகாரிகள், தொண்டு நிறுவனங்கள் பிரநிதிகள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் கோவையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மத்திய தென்னை நார் வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில பொதுச் செயலர் வானதி சீனிவாசன், சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், ஜி.கே.நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்ற இக்கூட்டத்தில், அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பேசியதாவது:
பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ள ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக தமிழகம் - கேரளம் இடையே கடந்த சுமார் 50 ஆண்டுகளாகப் பிரச்னை நீடிக்கிறது. கணவன்- மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்படும்போது, அதில் குடும்ப நல நீதிமன்றம் தலையிட்டுத் தீர்வு காண்பதைப் போலவே இந்தப் பிரச்னையிலும் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண முயற்சிக்கும். இது தொடர்பாக ஏற்கெனவே ஒரு முறை பேசியிருக்கிறோம்.
கோவையில் நொய்யல் ஆறு, உக்கடம் பெரியகுளம் உள்ளிட்ட நீர்நிலைகளைச் சீரமைப்பது தொடர்பாக பல்வேறு தன்னார்வ அமைப்புகள் முறையிட்டுள்ளன. பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடனும் இந்த நீர்நிலைகளைச் சீரமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பது தொடர்பாகவும் பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. கழிவுநீரை முறையாகச் சுத்திகரித்து, அதிலிருந்து வெளிவரும் நீரை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தவும், அதிலிருந்து கிடைக்கும் திடப் பொருள்களைக் கொண்டு பயோ-டீசல் உள்ளிட்டவை தயாரிக்கவும் முயற்சிக்க வேண்டும்.
அத்துடன், நிலத்தடி நீரை அதிகரிக்கவும், வேளாண் மேம்பாட்டுக்காக புதிய நீர் சேமிப்புத் திட்டங்களை உருவாக்கவும் ரூ. 6 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த நிதியை முழுமையாகப் பயன்படுத்தி, கழிவுகள் கலப்பதில் இருந்து நீரைப் பாதுகாத்து, நிலத்தடி நீரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்னும் 15 நாள்களில் மத்திய நீர் ஆணைய அதிகாரிகள் கோவைக்கு வந்து, நீர் மேலாண்மை தொடர்பாக அதிகாரிகள், தன்னார்வ அமைப்புகளுடன் ஆலோசனை நடத்துவார்கள். இதைத் தொடர்ந்து நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






