ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, தூத்துக்குடியில் புதன்கிழமை பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மாவட்டம் முழுவதும் 1,500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடுவோரை அச்சுறுத்தும் வகையில் போலீஸார் செயல்படுவதாகக் கூறி கண்டித்தும், ஆலையை நிரந்தரமாக மூடுவதற்காக பேரவையில் சிறப்புச் சட்டம் இயற்ற வலியுறுத்தியும் தூத்துக்குடியில் புதன்கிழமை கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி பண்டாரம்பட்டியில் சில தெருக்களிலும், வீடுகளிலும் கருப்புக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. மீளவிட்டான், தூத்துக்குடி புதுத்தெரு, லயன்ஸ்
டவுன், தாளமுத்துநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலும் வீடுகளில் கருப்புக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. சில இடங்களில் கருப்புக் கொடி கட்டுவதற்கு போலீஸார் எதிர்ப்பு தெரிவித்ததாக போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
ஆலையை திறக்கக் கோரி மனு: இதற்கிடையே தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுப்படி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் புதன்கிழமை மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 500-க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை மனு அளிக்க திரண்டனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மனு அளிக்க வந்தோரை வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்துக்குள் செல்லுமாறும், ஆட்சியரிடம் மனு அளிக்க 10 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவுறுத்தினர்.
இதையடுத்து, இந்து மக்கள் கட்சி, தெற்கு வீரபாண்டியபுரம், குமரெட்டியாபுரம், முத்தையாபுரம், முடுக்குக்காடு, குமாரகிரி, அய்யாரெட்டியூர், சோரீஸ்புரம், தூத்துக்குடி நகர்புற பகுதிகள், உடன்குடி மற்றும் ஆத்தூர் பகுதி விவசாயிகள் சங்கம், மீளவிட்டான், கால்டுவெல் காலனி, காமராஜ் நகர், 3 சென்ட் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரிந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் என தனித்தனியே ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
அவர்கள் அளித்த மனுவில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 3 வாரத்துக்குள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. அந்த நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த மாவட்ட ஆட்சியர், அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாநகராட்சியுடன் ஊராட்சிகள் இணைப்பு: கிராம மக்கள் எதிா்ப்பு

லெபனானில் மரண தண்டனை ரத்து
அரையிறுதியில் மோதும் ஸ்வியாடெக் - ஸ்விடோலினா

வளா் இளம் பெண்களுக்கு இலவசமாக புற்றுநோய் தடுப்பூசி: வட்டார மருத்துவ அலுவலா்
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!



