கஜா புயலால் கால்நடைகளை இழந்தவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கும் பணிகள் இன்னும் ஒரு மாதத்துக்குள் நிறைவடையும் என்று, கால்நடை வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மத்திய அரசிடம் சிறப்பு நிதி கோருவதற்காக அடுத்த வாரத்தில் தில்லிக்கு பயணிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டுக் கோழி இனங்களைப் பாதுகாத்தல், மேம்படுத்துதல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை ஊக்குவித்தல் தொடர்பான இரு நாள் தேசியக் கருத்தரங்கு சென்னை கால்நடை மருத்துவம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை தொடங்கியது.
இதில் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சி.பாலசந்திரன், பதிவாளர் டென்சிங் ஞானராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பண்ணையாளர்களும், விவசாயிகளும் அதில் பங்கேற்றனர். கருத்தரங்கின் ஒரு பகுதியாக நாட்டுக் கோழி இனங்களின் கண்காட்சி நடைபெற்றது.
அதனைத் தொடங்கி வைத்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
நாட்டு விலங்கினங்களைப் பாதுகாக்கும் நோக்கில் 1600 ஏக்கர் பரப்பளவில் சின்ன சேலத்தில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா ஒன்றை அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெறும். அதேபோன்று ரூ.50 கோடி செலவில் நாட்டுக் கோழி வழங்கும் திட்டமும் தொடங்கப்பட உள்ளது.
கஜா புயல் பாதித்த பகுதிகளில் கால்நடை இழப்புகள் குறித்த கணக்கெடுப்பு நிறைவடைந்து உரிய இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. மாடுகளுக்கு தலா ரூ.30 ஆயிரமும், ஆடுகளுக்கு தலா ரூ.3 ஆயிரமும், கோழிகளுக்கு தலா ரூ.100-ம் இழப்பீடாக வழங்கப்படுகிறது.
இதுவரை 50 சதவீதம் பேருக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டுவிட்டன.
மீதமுள்ளவர்களுக்கு இன்னும் ஒரு மாதத்தில் உரிய நிவாரணம் வழங்கப்படும். கால்நடை வளர்ச்சித் துறை சார்பில் மத்திய அரசிடம் புயல் நிவாரணமாக ரூ.150 கோடி சிறப்பு நிதி கேட்டுள்ளோம்.
இதுதொடர்பாக அடுத்த வாரத்தில் தில்லி சென்று அவர்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளோம். சிறப்பு நிதி கிடைக்கும்பட்சத்தில், அதைக் கொண்டு புயல் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு விலையில்லா கால்நடைகளை வழங்கும் திட்டத்தை ஆக்கப்பூர்வமாக முன்னெடுக்க முடியும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







