மத்திய அரசின் நீட் நுழைவுத் தேர்வுக்கு இன்னும் 3 மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டு இன்னும் திறக்கப்படாமல் உள்ள 312 பயிற்சி மையங்களைத் திறக்க வேண்டும் என பயிற்சிக்குக் காத்திருக்கும் மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மத்திய அரசு நடத்தும் நீட் உள்ளிட்ட அனைத்து வகையான போட்டித் தேர்வுகளையும், அரசுப் பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் இலவசப் பயிற்சிக்காக 412 ஒன்றியங்களிலும் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுமார் 71 ஆயிரம் மாணவர்கள் இம்மையங்களில் பங்கேற்பதற்காக பதிவு செய்திருந்தனர். இதையடுத்து முதல் கட்டமாக கடந்த அக்டோபர் மாதம் 100 மையங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்து மாணவர்களுக்கு கையேடுகளை வழங்கினார்.
பயிற்சி மையங்களுக்கு வரவேற்பு: அதைத் தொடர்ந்து தற்போது வரை சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்களிலும் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்கள் குறித்து காணொலி காட்சி உள்பட பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 20 நாள்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் எம்ஜிஆர் நகர், எழும்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள மையங்களில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் தமிழகம் முழுவதும் சுமார் 14,000 மாணவர்களும் இப்பயிற்சியைப் பெற்று வருகின்றனர்.
"ஸ்பீட் இன்ஸ்டிடியூட்' என்ற நிறுவனம் அரசுடன் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நீட் தேர்வு வரும் மே மாதம் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
ஆனால், நான்கு மாதங்கள் ஆகியும் எஞ்சியுள்ள 312 பயிற்சி மையங்கள் இதுவரை திறக்கப்படவில்லை. இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோருவது உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் அரசின் சார்பில் இதுவரை எடுக்கப்படவில்லை. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கடந்த சில நாள்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் கூறுகையில், ஓரிரு நாள்களில் அனைத்து ஒன்றியங்களிலும் பயிற்சி மையங்கள் செயல்படும் என்று அறிவித்தார்.
சிறப்பு வகுப்புகளாக மாறிய பயிற்சி வகுப்புகள்: இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.4) பல ஒன்றியங்களில் பயிற்சி மையங்கள் என்ற பெயரில் மதியம் வரை மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டன. இதில் பயிற்சிக்காக பதிவு செய்திருந்த மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்த மையங்களில் சிறப்பு பயிற்றுநர்களுக்குப் பதிலாக அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களே மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தனர். மேலும் திடீரென தொடங்கப்பட்ட மையங்களில் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
ஆசிரியர்களை கட்டாயப்படுத்தக் கூடாது: இதுகுறித்து அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சிலர் கூறியது: நீட் தேர்வில் பெரும்பாலும் சிபிஎஸ்இ பாடத் திட்டம் தொடர்பான வினாக்களே இடம்பெறுகின்றன. இந்த நிலையில், அரசு எங்களுக்கு எந்தப் பயிற்சியும் அளிக்காமல் மாணவர்களுக்கு நீட் பயிற்சியை அளிக்க வேண்டும் என அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர். எந்த வித வழிகாட்டுதலும் இல்லாமல் வெறும் கண்துடைப்புக்காக பயிற்சி வகுப்புகளை நடத்தினால் நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஆண்டு ஏற்பட்ட பாதிப்பு இவ்வாண்டும் தொடரும். எனவே அரசு இதைக் கருத்தில் கொண்டு ஏற்கெனவே செயல்பட்டு வரும் 100 பயிற்சி மையங்களைப் போன்றே நவீன வசதிகளுடன் எஞ்சியுள்ள 312 பயிற்சி மையங்களையும் தொடங்க வேண்டும். அதன் மூலம் மீதம் உள்ள 57 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மது குடித்தவா் கிணற்றில் விழுந்து பலி

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

ஏப். 16-இல் நாமக்கல்லில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிரசாரம்: ராஜேஸ்குமாா் எம்.பி. தகவல்
மேலப்பாளையத்தில் கோஷ்டி மோதல்: 7 போ் கைது
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


