3 விவசாயிகளைக் கொன்ற யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது
ஒசூர் அருகே 3 விவசாயிகளைக் கொன்ற யானையை, வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு திங்கள்கிழமை பிடித்தனர். பின்னர், அந்த யானையை உரிகம் வனப் பகுதியில் விட்டனர்.


ஒசூர் அருகே 3 விவசாயிகளைக் கொன்ற யானையை, வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு திங்கள்கிழமை பிடித்தனர். பின்னர், அந்த யானையை உரிகம் வனப் பகுதியில் விட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் வனப் பகுதியில் இருந்து பிரிந்து வந்த 18 வயதுடைய ஆண் யானை கடந்த சில தினங்களாக சூளகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. அந்த யானையை வனத் துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த ஜன. 3-ஆம் தேதி சின்னாறு அருகே பந்தரகுட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜப்பாவை (60) தாக்கி கொன்றது. அவரது உடலை எடுக்கச் சென்ற ரங்கநாதன், முனிகிருஷ்ணன் ஆகிய 2 பேரையும் யானை தூக்கி வீசியது. இதில் அவர்கள் காயமடைந்தனர். இதன் தொடர்ச்சியாக, ஜன. 4-இல் சூளகிரி அருகே தேவர்குட்டப்பள்ளி கிராமத்துக்குள் சென்ற யானை அங்கு முனிராஜ் (60) என்ற விவசாயியை தூக்கி வீசி தந்தத்தால் குத்திக் கொன்றது.
தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்த யானையை மயக்க ஊசி போட்டு பிடிக்க, வனத்துறையினர் நடவடிக்கையில் இறங்கினர். ஆனால் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் தேடியும் அந்த காட்டு யானை கிடைக்கவில்லை.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை சூளகிரி அருகே ஒட்டையனூரைச் சேர்ந்த விவசாயி தேவன் (50) அந்த வழியாக நடந்து சென்ற போது, அங்கு வந்த ஒற்றை யானை தேவனை தும்பிக்கையால் தூக்கி வீசி கொன்றது. இதையடுத்து, கிருஷ்ணகிரி-ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒட்டையனூரில் யானை இருப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மண்டல வன பாதுகாவலர் உலகநாதன், மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறையினர், வேட்டை தடுப்புக் குழுவினர் அங்கு சென்றனர். அதே போல யானைக்கு மயக்க ஊசி செலுத்துவதில் சிறப்பு பயிற்சி பெற்ற கர்நாடக மாநிலம், பன்னார்கட்டா கால்நடை மருத்துவர் அருண்ஷா தலைமையிலான மருத்துவக் குழுவினர் சென்றனர்.
இதைத் தொடர்ந்து, காலை 9 மணிக்கு துப்பாக்கியில் பொருத்தப்பட்ட மயக்க ஊசி மூலமாக யானை சுடப்பட்டது. இதையடுத்து, சிறிது தூரம் ஓடிய யானை அப்படியே நின்றது. தொடர்ந்து 2-ஆவது மயக்க ஊசி துப்பாக்கியால் சுடப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆக்ரோஷம் குறைந்த யானை ஓரிடத்தில் நின்றது. யானை மயக்கமடைந்து விட்டது என எண்ணிய வனத் துறையினர் அருகில் சென்றனர். அப்போது, திடீரென்று யானை திரும்பி ஓடி வந்தது. இதை கண்ட வனத்துறையினர் அங்கிருந்து தப்பி ஓடினர்.
பின்னர் பிற்பகல் 1 மணி அளவில் 3-ஆவது மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இதையடுத்து யானை மயக்கமடைந்தது.
இதன் பின்னர் யானையின் உடல் கயிறால் கட்டப்பட்டு, லாரியில் ஏற்றினர். பின்னர் யானையை தேன்கனிக்கோட்டை வட்டம், உரிகம் அடர்ந்த வனப் பகுதிக்கு கொண்டு சென்று இறக்கிவிட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
யானை பிடிக்கப்பட்ட தகவல் அறிந்த எம்.எல்.ஏ.க்கள் தளி ஒய்.பிரகாஷ், வேப்பனப்பள்ளி பி.முருகன் ஆகியோர் அங்கு சென்று யானை தாக்கி பலியான தேவன் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...