

இந்து ஆலயங்களை சந்தைகளாக மாற்றக்கூடாது என்று, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை இரவு வருகை தந்தார். கோயிலில் பள்ளியறை பூஜையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்த அவர், பின்னர் கோயிலில் தீ விபத்தால் சேதமடைந்த வீர வசந்தராயர் மண்டபத்துக்குச் சென்று பார்வையிட்டார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: சில மாதங்களுக்கு முன் திருச்செந்தூர் கோயிலில் கட்டடம் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்தார். தற்போது, மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து நடந்த பகுதிகளை பார்வையிட்டபோது, ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுடன் மேலும் சில பகுதிகளில் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.
ஆயிரங்கால் மண்டபம் அம்மன் அருளால் தப்பியுள்ளது. மண்டபம் எரிந்திருந்தால் தமிழகத்தின் புராதனப் பொக்கிஷங்களும் அழிந்திருக்கும்.
கோயிலில் இருந்த கடைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் தெளிவு இல்லை. கோயிலில் மொத்தம் 115 கடைகள் இருப்பதாகவும், தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் 42 கடைகள் இருப்பதாகவும் தெரிவித்தனர். கோயிலில் இத்தனை கடைகள் எதற்கு உள்ளன. கோயிலைச் சுற்றிலும் கடை வீதி உள்ளது.
அங்கு, கோயிலுக்குத் தேவையான துணி உள்ளிட்ட பொருள்களை பக்தர்கள் வாங்கிக் கொள்ள வசதிகள் உள்ளன.
எனவே, கோயிலில் கடைகள் தேவையில்லை. பூஜை பொருள்கள் விற்கவேண்டுமென்றால், இந்து அறநிலையத் துறையே மிகக்குறைந்த அளவில் கடைகள் நடத்தலாம். இந்து ஆலயங்களை சந்தைகளாக அதிகாரிகள் மாற்றக்கூடாது.
மதுரை மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள கோயில்கள் அனைத்திலும் கடைகளை தனியார் நடத்த அனுமதிக்கக் கூடாது.
மீனாட்சியம்மன் கோயிலின் உள்பகுதியில் தீவிபத்து ஏற்பட்டால் அதை அணைப்பதற்குரிய கருவிகளோ, வசதிகளோ இல்லை. எனவே, கோயிலுக்கு வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களை பாதுக்காக்கும் நடவடிக்கையில் கோயில் நிர்வாகம், காவல்துறை, அரசு இணைந்து செயல்பட வேண்டும்.
கோயிலில் தீ விபத்து தொடர்பான விசாரணையில் பக்தர்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறப்படுகிறது. எனவே, வெளி அமைப்புகளைக் கொண்டு விசாரணை நடத்தலாம். இதில், கோயில் நிர்வாகத்துக்கு தயக்கம் தேவையில்லை. தீவிரவாதிகள் புதிய முறைகளில் தாக்குதல் நடத்துக்கின்றனர். ஏற்கெனவே, இதே கோயிலில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. எனவே, வெளி விசாரணை தேவை என்பது ஏற்கத்தக்கதே.
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை 6 மாதங்களுக்குள் சீரமைக்கப்பட வாய்ப்பில்லை.110 விதிகளின் கீழ் கட்டடங்களை ஒரே நாளில் எழுப்பி விட முடியாது என்றார்.
அவருடன், பாஜக மாநிலச் செயலர் இரா. ஸ்ரீனிவாசன், மாநில துணைத் தலைவர் சுரேந்திரன், மாநகர் மாவட்டத் தலைவர் சசிராமன், ஆலய ஒருங்கிணைப்புக் குழு ஆதி சேஷன் உள்பட பலர் வந்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.