

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தைத் திறந்து வைத்ததன் மூலம் அவை மரபை சட்டப் பேரவைத் தலைவர் ப.தனபால் மீறியுள்ளதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:
உச்ச நீதிமன்றத்தால் 4 ஆண்டு காலம் சிறை மற்றும் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்ட முதல் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதா இன்றைக்கு உயிரோடு இருந்திருந்தால், சசிகலாவோடு பெங்களூரு சிறையில் இருந்திருப்பார். ஏற்கெனவே, அரசுக் கட்டடங்கள் மற்றும் அரசு விழாக்களில் அவரது புகைப்படங்களை வைக்கக்கூடாது என்று சட்டப் பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, அவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தங்களுடைய நோக்கத்துக்கு எதிராகத் தீர்ப்பு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் அவசரமாக ஜெயலலிதாவின் படத்தை சட்டப் பேரவையில் திறந்து வைத்துள்ளனர். பேரவைத் தலைவர் என்பவர் சட்டப் பேரவையின் மரபைப் பாதுகாக்க வேண்டியவர். தடைசெய்யப்பட்ட குட்கா போதைப்பொருள்கள் அமைச்சர்கள், காவல்துறை உயரதிகாரிகளின் ஒத்துழைப்போடு, அரசின் ஒத்துழைப்போடு விற்கப்படுகிறது என்ற செய்தியை பேரவையில் ஆதாரத்துடன் குட்காவை எடுத்துக் காட்டியபோது, அதில் எந்த தவறும் இல்லாதபோதும், எங்களை அவையில் இருந்து வெளியேற்றினார்.
இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அப்போது நாங்கள் அவையை மீறியதாக சொல்லும் அவர், இன்றைக்கு அவை மரபை மீறியுள்ளார் என்பது எங்களுடைய குற்றச்சாட்டு. ஜெயலலிதாவின் படத்திறப்பை திமுக அரசியலாக்குவதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருக்கலாம். திமுக மட்டுமல்ல, காங்கிரஸ், சிபிஎம், தேமுதிக உள்ளிட்ட பல கட்சிகளும் எதிர்த்து வருகின்றன.
படத்தைத் திறந்து வைக்க வேண்டுமென்று பிரதமர் மோடி , குடியரசுத் தலைவர் மற்றும் தமிழக ஆளுநரை அணுகியும் யாரும் திறக்க முன் வராததால், பேரவைத் தலைவர் மூலம் திறந்து வைத்துள்ளனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் படத்தை நாடாளுமன்றத்திலும் திறப்போம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறுவது வேடிக்கையாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.