மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தொடரும் செயின் பறிப்பு கொடூரங்கள்: வைரலாகும் விடியோக்களால் கலக்கத்தில் பெண்கள்

சென்னை நகரின் முக்கியப் பகுதிகளில் சாலையில் நடந்து செல்லும் பெண்களைக் குறி வைத்து நடத்தப்படும் செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்பான விடியோக்கள் வைரலாகியுள்ளன.

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 6:50 am

DIN


சென்னை: சென்னை நகரின் முக்கியப் பகுதிகளில் சாலையில் நடந்து செல்லும் பெண்களைக் குறி வைத்து நடத்தப்படும் செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்பான விடியோக்கள் வைரலாகியுள்ளன.

செயின் பறிப்பு கொள்ளையர்களால் மிகக் கொடூரமாக நடத்தப்பட்டிருக்கும் இந்த கொள்ளைகள் பட்டப்பகலில், மனிதாபிமானமற்ற முறையில் நடந்திருப்பதைப் பார்க்கும் போது, இதுபோன்ற குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதையே காட்டுகிறது.

கடந்த இரண்டு நாட்களில், மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதிகளில் நடந்திருக்கும் இரண்டு செயின் பறிப்பு சம்பவங்களும் பல கேள்விகளை எழுப்புகின்றன. அதில் ஒரு விடியோவில் செயின் பறிப்பின் போது, பாதிக்கப்பட்ட பெண் சாலையில் இழுத்துச் செல்லப்படும் காட்சி பார்ப்போரை பதற வைக்கிறது. குறைந்தபட்ச மனிதாபிமானம் கூட இல்லாமல், செயினுக்காக பெண்ணை சாலையில்  இழுத்துச் செல்லும் கொள்ளையர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதே பொதுமக்களின் கோரிக்கை. இந்த விடியோவைப் பார்க்கும் அந்த பெண்ணின் குடும்பத்தினரின் மனநிலை எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என்பதை பலராலும் உணர முடியும்.

மற்றொரு விடியோவில், கணவருடன் நடந்து செல்லும் பெண்ணின் கழுத்தில் இருந்து செயினை பறித்துக் கொண்டு இரண்டு சக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் செல்லும் காட்சி. தனியாக நடந்து செல்லும் பெண்கள் மட்டுமல்ல, ஆண் துணையோடு சென்றாலும், தங்களை எதுவும் செய்ய முடியாது என்ற ஒரு தைரியம் செயின் பறிப்புக் கொள்ளையர்களுக்கு இருப்பதையே காட்டுகிறது.

அரும்பாக்கத்தில் வீணா தோட்டம் பகுதியைச் சேர்ந்த மேனகா (37) என்பவர் வள்ளுவர்நகர் பகுதியில் காலை 7.30 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த இரண்டு இளைஞர்களில் ஒருவர் மேனகாவின் கழுத்தில் இருந்த 13 சவரன் தாலிச் செயினை பறிக்க முயல்கிறார். 

YouTube video thumbnail

ஆனால், தாலிச் செயின் அறுபடாததால், மேனகா சாலையில் விழுகிறார். இரு சக்கர வாகனம் வேகமாகச் செல்ல, அதன் பின்னால் அமர்ந்திருக்கும் கொள்ளையன் செயினுடன் மேனகாவையும் சாலையில் தரதரவென இழுத்துச் செல்கிறார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இறுதியாக செயின் அறுந்து கொள்ளையர்கள் தப்பித்துச் சென்றனர். இது குறித்து கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கை மற்றும் கால்களில் காயமடைந்த மேனகா, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

மற்றொரு செயின் பறிப்பு சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை 5.15 மணியளவில், குன்றத்தூர் அருகே ராகவேந்திரா நகர் பகுதியில் நடந்துள்ளது. ஜெயஸ்ரீ (57) என்ற பெண் தனது கணவருடன் சாலையில் நடந்து செல்கிறார். அவர்களது பின்னால் இரு சக்கர வாகனத்தில் கொள்ளையர்கள் நிற்கிறார்கள். அதில் இருந்து ஒருவன் இறங்கி நடந்து வந்து ஜெயஸ்ரீயின் கழுத்தில் இருக்கும் தங்கச் சங்கிலியை பறிக்கிறான். இதில் நிலைதடுமாறி ஜெயஸ்ரீ சாலையில் விழுகிறார். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவங்களை பார்த்து அதிர்ந்து போன கணவர், கொள்ளையர்களை துரத்திக் கொண்டு ஓடுகிறார். ஆனால், கொள்ளையன் தயாராக இருந்த இரு சக்கர வாகனத்தில் தப்பியோடுகிறான். 

YouTube video thumbnail

இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.

இவ்விரு சம்பவங்களைப் போல சென்னையில் பல செயின் பறிப்புச் சம்பவங்கள் நாள்தோறும் நடந்து கொண்டிருந்தாலும், அடுத்தடுத்து இந்த விடியோக்கள் சமூக தளங்களில் வைரலாகியிருப்பது பெண்களுக்கு கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.