பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

மக்கள் நலனுக்காகவே வாழ்ந்தவர் ஜெயலலிதா: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

மக்கள் நலனுக்காகவே வாழ்ந்தவர் ஜெயலலிதா என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவிவித்துள்ளார்.

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 7:21 am

DIN

மக்கள் நலனுக்காகவே வாழ்ந்தவர் ஜெயலலிதா என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் ஜெயலலிதா படத்திறப்பு விழாவில் இன்று கலந்துகொண்டு பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,
என்றும் பொய்க்காத வாய்மையாலும், எதிலும் தோற்காத நேர்மையாலும், இந்த சட்டப்பேரவைக்கே பெருமை தேடித் தந்தவர் ஜெயலலிதா. அந்தப் பெருமைக்கு பெருமை சேர்க்கும் விதமாக, சட்டப்பேரவை மண்டபத்தில், ஜெயலலிதா திருவுருவப் படத்தை, அவரது விசுவாசத் தொண்டர்களாகிய நாம் இன்று திறந்து வைக்கிறோம்.

“இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்” என்று பாடினார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப, ஜெயலலிதா பேரும், புகழும் அடைந்தவர், இந்த உலகில் வேறு யார் இருக்கிறார்கள் என்று, தமிழ் இனமே பாராட்டியது. இன்றும் பாராட்டிக் கொண்டேதான் இருக்கிறது.

தமிழர்களின் நலனுக்காகவே வாழ்ந்த ஜெயலலிதாவை, தமிழ் கூறும் நல்லுலகம் மறக்கவே மறக்காது என்பதைத்தான் ஜெயலலிதாவின் இந்த திருவுருவப் படத்திறப்பு நிகழ்ச்சி நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

வாக்குகளை வாங்குவதற்காக மட்டுமே, மக்களைச் சந்திக்கின்ற தலைவர்களுக்கு மத்தியில், மக்களை வாழ வைப்பதற்காகவே, மக்களை சந்தித்த
ஒரே தலைவர், ஜெயலலிதா.

உலகில் புண்ணியங்கள்தான் ஜெயிக்கும், என்றைக்கும் பாவங்கள் ஜெயிக்காது. தியாகங்கள்தான் ஜெயிக்கும், என்றைக்கும் துரோகங்கள் ஜெயிக்காது.
பொதுநலம்தான் ஜெயிக்கும், சுயநலங்கள் ஜெயிக்காது என்ற சத்திய வார்த்தைகளை, தன் வாழ்வில் நிரூபித்துக் காட்டியவர் ஜெயலலிதா.

ஒரு நாட்டில், நல்லாட்சி நடக்க வேண்டுமென்றால் அதற்கு தூய தலைமை வேண்டும். அந்தத் தலைமைக்கு, அனைவரையும் அரவணைக்கும் அன்பு மனம் வேண்டும். அளவில்லா அறிவாற்றல் வேண்டும். எதிர்ப்புகளுக்கு அஞ்சாத வீரம் வேண்டும். அநீதிக்கு அஞ்சாத துணிச்சல் வேண்டும். 

இரக்கம் காட்டுகின்ற இதயம் வேண்டும். மக்களுக்கான நல்ல திட்டங்களை உருவாக்கும் சீரிய சிந்தனை வேண்டும். அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும், புயல் வேக செயலாற்றல் வேண்டும். இத்தனை அருங்குணங்களுக்கும் சொந்தக்காரராக, ஜெயலலிதா ஒருவர் மட்டுமே விளங்கினார்கள்.

அதனால்தான், ஒரு முறை ஆண்ட கட்சி, மீண்டும் ஆட்சிக்கு வராது என்ற 32 வருட அரசியல் வரலாற்றை உடைத்து, மீண்டும் ஜெயலலிதாவை,
இந்த சட்டப்பேரவையிலே, தமிழக பெருமக்கள் ஆட்சிக் கட்டிலிலே அமர வைத்தார்கள்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த சட்டப்பேரவை, ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியிலே, பல சரித்திர சாதனைகளை படைத்திருக்கிறது.

வரவே வராது என்ற காவேரியை வரவைப்பதற்காக, உச்ச நீதி மன்றம் சென்று, உறுதியோடு போராடி, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, மத்திய அரசிதழில் இடம் பெற வைத்தவர் ஜெயலலிதா.

உயரவே உயராது என்று நினைத்திருந்த முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர வைத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உறுதி தந்தவர் ஜெயலலிதா. 

ஈழகத்தில் தமிழ் இனத்தை அழித்து, ஆணவத்தில் மிதந்த ராஜபக்சே, ஒரு போர்க் குற்றவாளி என்ற வரலாற்று தீர்மானத்தை, இதே சட்டப்பேரவையில் நிறைவேற்றிய வீரமங்கை ஜெயலலிதா. 

மதநல்லிணக்கம் காக்கும் மாசற்ற தலைவராக விளங்கிய ஜெயலலிதா, மானசரோவர் சென்று வர இந்துகளுக்கும், மெக்கா சென்று வர இஸ்லாமியர்களுக்கும்,
ஜெருஜலம் சென்று வர கிறிஸ்தவர்களுக்கும், சலுகைகளை அளித்து உத்தரவிட்டார்.

ஒரு தாய்க்குத்தான் தெரியும், பிள்ளைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்று...ஜெயலலிதாவுக்குதான் தெரியும், தமிழக மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று, என்று மக்கள் மனம் மகிழ்ந்து, மன நிறைவு பெற வைத்தார்.

தமிழக மக்களின் நலனுக்காக, திட்டங்களை வரிசையாகத் தந்து, மக்களின் வேதனையை தீர்த்ததால், ஜெயலலிதாவை எதிர்த்தவர்கள் எல்லாம் பாராட்டினார்கள், என்ற சாதனையை உருவாக்கினார் ஜெயலலிதா. 

மக்களுக்கான திட்டங்களைத் தந்து,
மக்களால் நான்...
மக்களுக்காகவே நான்...
உங்களால் நான்...
உங்களுக்காகவே நான்...
- என்ற சத்திய வாசகத்தை, சரித்திரமாக மாற்றி காட்டினார் ஜெயலலிதா. 

ஜெயலலிதா இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், நிலைத்த புகழோடு, நீக்கமற நம்முள் நிறைந்திருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.