தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு: மூன்று மாணவிகள் மரணத்திற்கு காரணமான அதிமுக நிர்வாகிகள் விடுதலை?

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில்  மூன்று மாணவிகள் மரணத்திற்கு காரணமான அதிமுக நிர்வாகிகள் மூவரும், தமிழக அரசின் சிறப்புத் திட்டத்தின் காரணமாக விரைவில் விடுதலை ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு: மூன்று மாணவிகள் மரணத்திற்கு காரணமான அதிமுக நிர்வாகிகள் விடுதலை?

சென்னை: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில்  மூன்று மாணவிகள் மரணத்திற்கு காரணமான அதிமுக நிர்வாகிகள் மூவரும், தமிழக அரசின் சிறப்புத் திட்டத்தின் காரணமாக விரைவில் விடுதலை ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2000-ஆம் ஆண்டில் கொடைக்கானல் 'பிளசண்ட் ஸ்டே' ஹோட்டல் வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தர்மபுரி வேளாண் கல்லூரி மாணவிகள் பயணம் செய்த பேருந்து எரிக்கப்பட்டது.

இதில் கோகிலவாணி, காயத்திரி மற்றும் ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் அநியாயமாக பலியானார்கள். இதுதொடர்பாக தர்மபுரி அ.தி.மு.க. நிர்வாகிகள் நெடுஞ்செழியன், மது மற்றும் முனியப்பன் ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. இதை எதிர்த்து மூவரும் உச்ச நீதிமன்றத்தில்  அப்பீல் செய்தனர்.

மனுவை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது. இவர்கள் மூவரும் தற்பொழுது வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் அதிமுக நிர்வாகிகள் மூவரும், தமிழக அரசின் சிறப்புத் திட்டத்தின் காரணமாக விரைவில் விடுதலை ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி நீண்டகாலம் ஆயுள் தண்டனை அனுபவித்த கைதிகளை தமிழக அரசு  விடுதலை செய்து வருகிறது. அந்த வகையில் அடுத்த கட்டமாக அதிமுக நிர்வாகிகள் மூவரும், விரைவில் விடுதலை ஆக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதே சமயம் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப் பட்டதால் அவர்களுக்கு அரசின் இந்த உத்தரவு பொருந்துமா உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இதேபோல்  தமிழகத்தையே உலுக்கிய சிதம்பரம் நாவரசு கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட மாணவர் ஜான்டேவிட் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். 20 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வருவதால் இவரையும் விடுதலை செய்வது குறித்து சிறைத்துறை அதிகாரிகளின் ஆலோசனை நடந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com