லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெற்றுவரும் நிலையில் அதை மீறி மேட்டுப்பாளையத்தில் இருந்து கேரளத்துக்கு காய்கறிகளை ஏற்றிச் சென்ற லாரி பாலக்காடு அருகே சென்றபோது லாரி மீது சிலர் பெரிய கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் லாரி கிளீனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். லாரி ஓட்டுநர் படுகாயம் அடைந்தார்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் லாரிகள் உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் கடந்த 20ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் கடந்த 3 நாள்களாக லாரிகள் இயக்கப்படவில்லை. அதேபோல், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தாலுகாவிலும் 3000 லாரிகள் உள்பட 4500 சரக்கு வாகனங்கள் ஓடாது என நகர லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், நீலகிரியிலிருந்து கொண்டு வரப்படும் உருளைக்கிழங்கு, கேரட், கோஸ் உள்ளிட்ட மலை காய்கறிகளுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லாததால் தினமும் சிறிய வாகனங்கள் மூலம் மலை காய்கறிகள் மேட்டுப்பாளையம் கொண்டு வரப்பட்டு ஏல விற்பனைக்குப் பின்னர் கேரளம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. தற்காலிக ஓட்டுநர்கள், கிளீனர்களைக் கொண்டு குறைந்த அளவில் காய்கறி லாரிகள் இயக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் மேட்டுப்பாளையத்திலிருந்து நிஜாம் என்பவருக்குச் சொந்தமான லாரியில் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம், சங்கனாச்சேரிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு லாரி சென்றது.
மேட்டுப்பாளையம் பெரிய பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த நூருல்லா (26) என்பவர் லாரியை ஓட்டிச் சென்றார். அவருக்கு உதவியாக அன்னூரை அடுத்த வடக்கலூரைச் சேர்ந்த முருகேசன் மகன் விஜய் என்கிற முபாரக் பாட்ஷா (21) என்பவர் கிளீனராக சென்றார்.
இந்த லாரி வாளையாறு சோதனைச் சாவடியைக் கடந்து கஞ்சிக்கோடு என்ற இடத்தில் சென்றபோது 15 பேர் கொண்ட லாரி ஓட்டுநர்கள் அடங்கிய கும்பல் லாரியை நிறுத்தி தகராறு செய்துள்ளது. ஆனால், லாரி ஓட்டுநர் நூருல்லா அதைப் பொருட்படுத்தாமல் லாரியை இயக்கிச்செல்ல முயன்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல், லாரியை நோக்கி சரமாரியாக கருங்கற்களை வீசியுள்ளது. மேலும் லாரியிலிருந்து இருவரையும் கீழே இறக்கி அவர்கள் மீது கற்களை வீசித் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த முபாரக் பாட்ஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஓட்டுநர் நூருல்லா படுகாயம் அடைந்தார்.
சம்பவ இடத்துக்குவந்த கேரள மாநில போலீஸார் உயிரிழந்த பாட்ஷாவின் உடலை மீட்டு பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த நூருல்லாவுக்கு பாலக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கேரள மாநிலம், கசபா போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் மேட்டுப்பாளையம் லாரி உரிமையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு லாரி ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் வெளியிட்ட அறிக்கை : தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியை அளிக்கிறது. எங்கள் சங்கத்தைச் சேர்ந்த அனைத்து ஓட்டுநர்களும் உயிர் பாதுகாப்பு கருதி லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் முடியும் வரை நாங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதென முடிவு செய்துள்ளோம். இதற்கு அனைத்து உருளைக்கிழங்கு, காய்கறி மண்டி உரிமையாளர்களும், கேரள வியாபாரிகளும், லாரி புரோக்கர்களும், சுமை தூக்கும் தொழிலாளர்களும், உள்ளூர் ஓட்டுநர் சங்கத்தினரும் ஆதரவு தரவேண்டும் என தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உத்யோக் பவன் அருகே தீ விபத்து: தொழிலாளா்களின் தற்காலிக குடியிருப்புகள் சேதம்

முதல்வா் விஜய் செய்த சைகை: பேரவைத் தலைவா் விளக்கம்

வரசக்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா

அரசப் பதவி என்பது சலுகை அல்ல: குடியரசு துணைத் தலைவா்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



