அனைத்து மத்திய சிறை வளாகங்களில் திறந்தவெளி சிறை

அனைத்து மத்திய சிறை வளாகங்களில் திறந்த வெளிச்சிறை அமைக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்தார்.
Updated on
1 min read

அனைத்து மத்திய சிறை வளாகங்களில் திறந்த வெளிச்சிறை அமைக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் சி.வி.சண்முகம் வெளியிட்ட அறிவிப்புகள்:
சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள 32 வழக்குரைஞர்கள் சங்கங்களுக்கு சட்டப் புத்தகங்களும், புத்தக அலமாரிகளும் ரூ.1 கோடியில் வழங்கப்படும்.
குடியிருப்புகள்: திண்டிவனத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் நடுவர்களுக்கான (1, 2) குடியிருப்புகள் ரூ.5.81 கோடியில் கட்டப்படும். திண்டிவனத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் ரூ.5.81 கோடியில் கட்டப்படும்.
சார்பு நீதிமன்றம்: திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தில் ரூ.1 கோடி செலவில் ஒரு சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ரூ.1.34 கோடியில் ஒரு தொழிலாளர் நல நீதிமன்றம் அமைக்கப்படும்.
சிறைத் துறை: தமிழகத்தில் அனைத்து மத்தியச் சிறை வளாகங்களிலும் காலியாக உள்ள இடங்களில் திறந்தவெளி சிறை அமைக்கப்படும். புழல் மத்திய சிறை- 2 நீங்கலாக இந்தப் பணி மேற்கொள்ளப்படும்.
சிறைத் துறையில் பணிபுரிந்து வரும் மற்றும் ஓய்வு பெற்ற அனைத்து அமைச்சுப் பணியாளர்களுக்கும் காவல்துறை அமைச்சுப் பணியாளர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்று காவல்துறை பொருள் வழங்கீட்டு மையத்தில் சலுகை விலையில் பொருள்கள் பெற்றுக் கொள்ள ஆணை வழங்கப்படும். சிறைத் துறைக்குத் தேவையான சிவில் பண்டகப் பொருள்களை வாங்கிட துறைத் தலைவருக்கு உள்ள நிதி அதிகார வரம்பு ஒரு பொருளுக்கு ரூ.4 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாகவும், ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள்களுக்கு ரூ.7,500-இலிருந்து ரூ.50 ஆயிரமாகவும் உயர்த்தப்படும்.
பெண்கள் தனிச் சிறை புழல், வேலூர், திருச்சி, புதுக்கோட்டை பார்ஸ்டல் பள்ளியில் ரூ.76 லட்சம் செலவில் தடை செய்யப்பட்ட பொருள்கள் சிறைக்குள் வருவதைக் கண்டுபிடித்து தடுத்திட 4 ஊடுகதிர் அலகிடல் கருவி நிறுவப்படும். தமிழ்நாடு காவலர் வீட்டுவசதிக் கழகம் மூலம் கோவை, திருச்சி, சேலம், கடலூர் மத்திய சிறைகளில் ரூ.4 கோடி செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.
விழுப்புரம், தேனி, தருமபுரி மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்ட மாவட்டச் சிறைகளில் ரூ.6.16 கோடியில் உள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com