திருச்சியில் நவீன வன மர விதை மையம்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

திருச்சியில் நவீன வன மர விதை மையத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார். மேலும், வனத்துறைக்கான புதிய கட்டடங்களையும் அவர் திறந்தார்.
திருச்சியில் நவீன வன மர விதை மையம்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்
Updated on
1 min read

திருச்சியில் நவீன வன மர விதை மையத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார். மேலும், வனத்துறைக்கான புதிய கட்டடங்களையும் அவர் திறந்தார்.
இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இது குறித்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:-
தமிழகத்தின் மத்தியப் பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு மரபியல் தரம் வாய்ந்த மற்றும் உயர்தர மர விதைகள் வழங்கும் அவசியத்தை கருத்தில் கொண்டு, திருச்சியில் நவீன வன மர விதை மையம் ஏற்படுத்தப்படும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் அறிவித்தார்.
அதன்படி, திருச்சி மாவட்டம் எம்.ஆர். பாளையத்தில் நவீன வன மர விதை மையம் தற்போது திறக்கப்பட்டது. இந்த மையமானது, விதை சேகரிப்பு, ஆய்வு, தரப்படுத்துதல், குளிர்ந்த அறைகளில் விதைகளைச் சேமித்தல் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த மையத்தில் விதை சேமிப்பு கிடங்கு, விதை உலர்த்தும் கலன், ஆய்வுக் கூடம்-வளர்ப்புக் கூடம், விதை தரம் பிரிக்கும் இயந்திரம், விதை பரிசோதனை இயந்திரம் ஆகிய வசதிகளை உள்ளடக்கி உள்ளது.
வனத் துறைக்கு புதிய கட்டடங்கள்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கட்டப்பட்டுள்ள வேட்டைத்தடுப்பு முகாம் கட்டடம், ஒருங்கிணைந்த வனக்காப்பாளர், வனக்காவலர் குடியிருப்பு ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார்.
மண் புழு உரம் தயாரிக்கும் இயந்திரம்: மரங்களை வெட்டாமல், அதனை வேருடன் பிடுங்கி மாற்றி நடவு செய்வும் வகையில், தனியான வாகன இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது. மேலும், உயிரிக் கழிவுகளான உடைந்த மரக் கிளைகள், சுள்ளிகள், காய்ந்த இலைகள் ஆகியவற்றை தூளாக்கி மண்புழு உரம் தயாரிக்கும் வகையில் தனி இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது. இதனை வனத்துறையிடம் முதல்வர் பழனிசாமி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், கே.சி.கருப்பணன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com