நீட் தேர்வு எதிர்ப்பில் தமிழக அரசு உறுதி: எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்

நீட் தேர்வு எதிர்ப்பில் தமிழக அரசு உறுதியுடன் இருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
நீட் தேர்வு எதிர்ப்பில் தமிழக அரசு உறுதி: எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்
Updated on
1 min read

நீட் தேர்வு எதிர்ப்பில் தமிழக அரசு உறுதியுடன் இருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, நீட் தேர்வு தொடர்பான பிரச்னையை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எழுப்பின. இதற்கு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலளித்துப் பேசியது: 
கடந்த ஆண்டு நீட் தேர்வில் பிரதீபா என்ற மாணவி நல்ல மதிப்பெண் எடுத்திருந்தார். ஆனால் அவருக்கு சித்த மருத்துவம் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், அவர் அந்த படிப்பில் சேரவில்லை. இந்த ஆண்டு மீண்டும் நீட் தேர்வு எழுதினார். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைவான மதிப்பெண் பெற்றார். அவரது இழப்பு மிகுந்த வருத்தம் தருகிறது.
நீட் தேர்வு எதிர்ப்பு என்பதுதான் மறைந்த முதல்வரின் நிலைப்பாடு. நீட் தேர்வு எதிர்ப்புக் கொள்கையில் மறைந்த முதல்வர் எப்படி உறுதியாக இருந்தாரோ, அதே உறுதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டிருக்கிறார். விலக்குக் கோரி பேரவையில் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அனைவரும் ஒருமித்த கருத்து, உணர்வுடன் இருந்து இதனை நிறைவேற்றினோம். மத்திய அரசுக்கும் அனுப்பி வைத்தோம்.
மற்ற மாநிலங்கள் எல்லாம், நீட் எதிர்ப்பைக் கைவிட்டு விட்ட நிலையில் நாம் மட்டும்தான் கடைசி வரை சட்டப் போராட்டம் நடத்தினோம். உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு வழக்கில், தமிழக மாணவர்களுக்கு எதிராக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நளினி சிதம்பரம் வாதாடினார். நாமும் அந்த வழக்கில் மூத்த வழக்குரைஞர்களை எல்லாம் வைத்து வாதாடினோம். உச்ச நீதிமன்ற அமர்வின் தீர்ப்புக்கு நாம் கட்டுப்பட்டு நடந்தோம். நாம் எதிர்பார்த்த தீர்ப்புக் கிடைக்கவில்லை. நீட் எதிர்ப்புக் கொள்கையில் இந்த அரசு உறுதியாக இருக்கிறது. 2005-ஆம் ஆண்டு நீட் தேர்வை அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் தான் அறிமுகம் செய்தது. அப்போது அந்தக் கூட்டணி ஆட்சியில் தி.மு.க.வும் இடம்பெற்றிருந்தது. எனவே நீட் தேர்வு வந்ததற்கு காங்கிரஸ் - தி.மு.க. தான் ஒட்டுமொத்த காரணம் என்றார். நீட் தேர்வைப் பொருத்தவரை மூல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com