
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இருந்து தினமும் வெளிநடப்பு செய்வதற்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் காரணங்களைத் தேடிக் கொண்டிருப்பதாக, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார்.
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து முகநூலில் அவதூறான கருத்துக்களை பகிர்ந்ததாக நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. முன்ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுக்கள் உச்ச நீதிமன்றம் வரையிலும் மறுக்கப்பட்ட போதிலும், அவரை இன்னும் தமிழக போலீசார் கைது செய்யவில்லை. ஐம்பது நாட்களைக் கடந்தும் அவர் இன்னும் கைது செய்யப்படாமலதான் இருக்கிறார்.
தற்பொழுது நடந்து வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்திலும் எஸ்.வி.சேகர் விவகாரம் எதிரொலித்தது.பேரவையில் புதனன்று எஸ்.வி.சேகர் விவகாரம் குறித்து பேச எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் முயன்றார். ஆனால் அவருக்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்தார். இதனைத் தொடர்ந்து ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
வெளிநடப்பு செய்த பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசும் போது, "எஸ்.வி.சேகர் தலைமைச் செயலாளரின் உறவினர் என்பதால், அவரை சுதந்திரமாக வெளியே சுற்றித் தெரியுமாறு தமிழக அரசு விட்டுள்ளது" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் இருந்து தினமும் வெளிநடப்பு செய்வதற்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் காரணங்களைத் தேடிக் கொண்டிருப்பதாக, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக தி.நகரில் உள்ள கட்சியில் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் கூறியதாவது:
நாட்டில் முக்கியத்துவம் கொடுப்பதற்கு எத்தனையோ விஷயங்கள் உள்ளன. உதாரணமாக காவிரி மேலாண்மை ஆணையத்தில் உறுப்பினர்களை பரிந்துரை செய்வதற்கான நேரம் முடிந்தும் கர்நாடகா இன்னும் செய்யவில்லை. அதை பற்றியெல்லாம் திமுக கவலைப்படவில்லை.
ஆனால் எஸ்.வி.சேகர் விவகாரத்திற்காக திமுகவின் 89 சட்டப்பேரவை உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்வது ஏற்றுக் கொள்ள இயலாத ஒன்று. இந்த விவகாரம் நீதிமன்றம் தொடர்புடையது. அதனை தமிழக அரசு கவனித்துக் கொள்ளும்.
ஆனால் இதற்காக வெளிநடப்பு செய்வது என்பதன் மூலம் தமிழக சட்டப்பேரவையில் இருந்து தினமும் வெளிநடப்பு செய்வதற்கு எதிர்க்கட்சி தலைவர் சகோதரர் ஸ்டாலின் காரணங்களைத் தேடிக் கொண்டிருப்பதையே காட்டுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.