இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்ட அயல்நாட்டு காதலர்கள்

நாகை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள காரைமேடு ஒளிலாயம் சித்தர்கள் கோயிலில் இந்து முறைப்படி அயல் நாட்டு காதல் ஜோடி வியாழக்கிழமை திருமணம் செய்துகொண்டனர்.
காரைமேடு ஒளிலாயத்தில் இந்து முறைப்படி வெளிநாட்டு ஜோடிக்கு நடைபெற்ற திருமணம். 
காரைமேடு ஒளிலாயத்தில் இந்து முறைப்படி வெளிநாட்டு ஜோடிக்கு நடைபெற்ற திருமணம். 
Updated on
1 min read

நாகை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள காரைமேடு ஒளிலாயம் சித்தர்கள் கோயிலில் இந்து முறைப்படி அயல் நாட்டு காதல் ஜோடி வியாழக்கிழமை திருமணம் செய்துகொண்டனர்.
மத்தியப்பிரதேசம் ஜபல்பூர் பகுதிக்கு சுற்றுலா வந்த பின்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜூஹா, மலேசியா நாட்டைச் சேர்ந்த வோங்க்வைகிப் ஆகியோருக்கிடையே காதல் ஏற்பட்டது. இந்த காதல் ஜோடி தமிழக கோயில்களுக்கு சுற்றுலா வந்தபோது, இங்குள்ள கலாசாரத்தால் ஈர்க்கப்பட்டு, பாரம்பரிய இந்து முறைப்படி, தமிழகத்தில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.
இதற்காக, இவர்கள் சீர்காழி அருகேயுள்ள காரைமேடு சத்குரு ஒளிலாயம் பீடத்துக்கு வந்தனர். இந்த பீடம் நாடி. ராஜேந்திர சுவாமிகளால் தோற்றுவிக்கப்பட்டதாகும். இங்கு 18 சித்தர்களுக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன. இங்கு வந்த அயல்நாட்டு காதலர்களை நாடி. முத்து, நாடி. மாமல்லன், ஈஸ்வரி ராஜேந்திரன் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர், இந்து முறைப்படி ஜூஹா பட்டுவேட்டி அணிந்தும், வோங்க்வைகிப் பட்டுப் புடவை அணிந்தும் வந்தனர். தொடர்ந்து, மணமகனை காசியாத்திரைக்கு அழைக்கும் ஐதீகமும், மணமக்களை ஊஞ்சலில் அமரவைக்கும் சம்பிரதாயங்களும் நடந்தன. 
பின்னர், மணமேடை அருகே அக்னி வளர்க்கப்பட்டு, சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, நாகசுரம் ஒலிக்க, வோங்க்வைகிப் கழுத்தில் ஜூஹா தாலி கட்டினார். அப்போது, அங்கு கூடியிருந்தவர்கள் அட்சதை தூவி மணமக்களை வாழ்த்தினர்.
தொடர்ந்து, பட்டம் கட்டுதல், அம்மி மிதித்து, அருந்ததிப் பார்த்தல், மெட்டி அணிவிக்கும் ஐதீகம் நடைபெற்றது. இதில், வெளிநாட்டிலிருந்து வந்திருந்த மணமக்களின் உறவினர்கள், ஒளிலாயம் நிர்வாகிகள், காரைமேடு பகுதி பொதுமக்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com