ஊக்கத் தொகை: கைத்தறி சங்கங்களுக்கான 2 நிபந்தனைகளை ரத்து செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

கூட்டுறவு கைத்தறி சங்கங்கள் ஊக்கத்தொகை பெறுவதற்காக மத்திய அரசு புதிதாக விதித்துள்ள இரண்டு நிபந்தனைகளை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்வர் எடப்பாடி
ஊக்கத் தொகை: கைத்தறி சங்கங்களுக்கான 2 நிபந்தனைகளை ரத்து செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்
Updated on
1 min read

கூட்டுறவு கைத்தறி சங்கங்கள் ஊக்கத்தொகை பெறுவதற்காக மத்திய அரசு புதிதாக விதித்துள்ள இரண்டு நிபந்தனைகளை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளார். கடித விவரம்:
கூட்டுறவு கைத்தறி சங்கங்கள் பொருள்களை விற்பனை செய்வதற்கான ஊக்கத் தொகையைப் பெறுவதற்கு மத்திய அரசின் தேசிய கைத்தறி மேம்பாட்டு திட்டத்தில், 2 புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது குறித்து தங்கள் (பிரதமர்) கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். கடந்த காலங்களில் கூட்டுறவு சங்கங்கள் ஊக்கத்தொகை பெறுவதற்கு விற்பனை உச்சவரம்புகளோ, நிபந்தனைகளோ விதிக்கப்படவில்லை.
தற்போதைய புதிய திட்டத்தில் கூட்டுறவு கைத்தறி சங்கத்தினர் 3 ஆண்டுகள் மட்டுமே ஊக்கத்தொகை பெற முடியும் என்றும், ரூ.30 லட்சத்துக்கு மேல் விற்பனை செய்யும் சங்கங்களுக்கு ஊக்கத்தொகை இல்லை என்றும் 2 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தைப் பொருத்தவரை 2017-18-ஆம் நிதியாண்டில் ரூ.30 லட்சத்துக்கும் மேல் உற்பத்தி செய்யும் பல்வேறு சங்கங்கள் ஊக்கத்தொகை பெற்று வருகின்றன.
புதிய நிபந்தனைகளின் படி 53,140 நெசவாளர்களை உள்ளடக்கிய 285 சங்கங்கள் மட்டும் ஊக்கத்தொகை பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது. 2.69 லட்சம் நெசவாளர்களை உள்ளடக்கிய 868 கைத்தறி சங்கங்கள் ஊக்கத் தொகையைப் பெற முடியாத சூழல் தமிழகத்தில் ஏற்படுகிறது.
தொழில் பாதிப்பு: ஊக்கத் தொகை பெறுவதற்கான நிபந்தனைகளால் தமிழகத்தில் கைத்தறி தொழில் பல்வேறு பாதிப்பைச் சந்திக்க நேரிடும். கைத்தறி பொருள்களுக்கான விற்பனை பெருமளவில் பாதிக்குள்ளாகி, அது சங்கத்தின் வருவாயையும் பாதிப்புக்கு உள்ளாக்கும். சங்கங்களுக்கு இடையேயான பணப் பரிவர்த்தனை பாதிக்கப்படும். இதன் காரணமாக நெசவாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு, வேறு தொழிலை நாட வேண்டிய நிலையை ஏற்படுத்தும். கைத்தறிப் பொருள்கள் தேக்கமடைவதுடன், தொழிலே முடங்கக்கூடிய சூழல் ஏற்படும்.
ஜிஎஸ்டியால் பாதிப்பு: தமிழகத்தில் கைத்தறி சங்கங்கள் பல ஆண்டுகளாக மத்திய அரசின் ஊக்கத்தொகையைச் சார்ந்தே இயங்கி வருகின்றன். ஏற்கெனவே, ஜிஎஸ்டி வரி விதிப்பால் கைத்தறி பொருள்களை விற்பது கடினமாக பணியாக இருந்து வருகிறது. இதன் காரணமாக பொருள்களைச் சந்தைப்படுத்துவதற்கு தொடர் உதவி அவசியமாக இருந்து வருகிறது.
மேலும், விசைத்தறி போட்டியாளர்களைச் சமாளித்து, கைத்தறிச் சங்கங்கள் பொருள்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வது கடினமான காரியமாகவும் இருக்கிறது. இதனாலும் சங்கங்களுக்கு தொடர் உதவி அவசியமாகிறது. எனவே, இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு, ரூ.30 லட்சத்துக்கு விற்பனை செய்யும் கைத்தறி சங்கங்களுக்கு ஊக்கத் தொகை இல்லை என்ற நிபந்தனையையும், 3 ஆண்டுகளுக்கு மேல் சங்கங்களுக்கு ஊக்கத் தொகை இல்லை என்பதையையும் ரத்து செய்ய மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com