

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது 65-ஆவது பிறந்த நாளை வியாழக்கிழமை கொண்டாடினார். அவருக்கு திமுக தலைவர் கருணாநிதி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல்காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்துக் கூறினர்.
தனது 65 -ஆவது பிறந்த நாளையொட்டி, ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திலிருந்து வியாழக்கிழமை காலை 7.20 மணியளவில் புறப்பட்ட மு.க.ஸ்டாலின், மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பின், வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்துக்குச் சென்றார். அங்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வரவேற்று, ஸ்டாலினுக்குப் புத்தகங்கள் பரிசளித்தார். அதைத்தொடர்ந்து பெரியார் நினைவிடத்துக்குச் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
கேக் வெட்டினார்: ஆழ்வார்பேட்டை இல்லத்துக்கு திரும்பிய ஸ்டாலின், குடும்பத்தினருடன் கேக் வெட்டிக் கொண்டாடினார். பின்னர் காலை 8.30 மணியளவில் அண்ணா அறிவாலயத்துக்கு வந்தார்.
மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து தொண்டர்கள் அவரை வரவேற்றனர். கலைஞர் அரங்கத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வரிசையில் நின்று அவருக்கு வாழ்த்துக் கூறினர்.
ராகுல் காந்தி வாழ்த்து: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தி, நடிகர் ரஜினிகாந்த், காங்கிரஸ் அகில இந்திய தலைவர்கள் குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் தொலைபேசி மூலம் ஸ்டாலினுக்கு வாழ்த்துக் கூறினர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் சுட்டுரையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
நேரில் வாழ்த்து: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன், திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருதன், துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, சுப்புலெட்சுமி ஜெகதீசன், திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் கனிமொழி, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, கே.என்.நேரு, மாவட்டச் செயலாளர்கள் பி.கே.சேகர்பாபு, ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், வழக்குரைஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், கவிஞர் காசிமுத்துமாணிக்கம் உள்படபலர் அறிவாலயத்துக்கு நேரில் வந்து ஸ்டாலினுக்கு வாழ்த்துக் கூறினர்.
கருணாநிதியிடம் வாழ்த்து: தொண்டர்கள் சந்திப்புக்குப் பிறகு கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை மு.க.ஸ்டாலின் சந்தித்தார். ஸ்டாலின் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டு அவருக்கு கருணாநிதி வாழ்த்துக் கூறினார்.
புத்தகங்கள் பரிசு: தொண்டர்கள் சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு அதிக அளவில் புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டன. வெள்ளிச் செங்கோல், சீர்வரிசை உள்ளிட்டவையும் அவருக்கு பரிசாக வழங்கப்பட்டன.
'திராவிட இயக்கத்தின் கனவுகளை நனவாக்குவேன்'
மு.க.ஸ்டாலின் தனது பிறந்த நாளையொட்டி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை தொண்டர்களை சந்தித்தார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
இந்தியாவில் ஒரு மதவாத அடிப்படையிலான ஆட்சி நடக்கிறது. அந்த ஆட்சிக்கு அதிமுக அரசு அடிபணிந்து செல்கிறது. நாட்டின் நலன் கருதி இந்த ஆட்சிகளுக்கு முடிவு கட்ட அனைவரும் கட்சி பேதமில்லாமல் செயல்பட்டு, சமூக நீதியை நிலைநாட்டவேண்டும் என்பதுதான் என் பிறந்த நாள் செய்தி.
இதற்காக திமுகவின் அனைத்து நிலைகளிலும் உள்ள எல்லா நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து தெருமுனை மற்றும் திண்ணைப் பிரசாரங்களில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.
பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அனைத்து பகுதிகளிலும் படிப்பகங்களை ஏற்படுத்த வேண்டும். திராவிட இயக்க தலைவர்களின் எத்தனையோ கனவுகள் நிறைவேறியிருந்தாலும், இன்னும் பல கனவுகள் நிறைவேற வேண்டியிருக்கின்றன. அவற்றை எல்லாம் நிறைவேற்றும் முயற்சியில் நான் தொடர்ந்து ஈடுபடுவேன் என்றார் ஸ்டாலின்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.