மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ஸ்ரீ ஜயேந்திரர் பிருந்தாவன பிரவேசம்: ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி

காஞ்சி காமகோடி பீடத்தின் 69- வது பீடாதிபதியும், இந்து சமயம் தழைக்க பாடுபட்டவர்களில் முன்னோடியுமான ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சித்தி அடைந்ததை ஒட்டி வியாழக்கிழமை அவரது உடல் வேத

News image
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு வேத மந்திரங்களுடன் அபிஷேக, ஆராதனைகளை செய்த விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். 
Updated On :1 மார்ச் 2018, 7:28 pm

DIN

காஞ்சி காமகோடி பீடத்தின் 69- வது பீடாதிபதியும், இந்து சமயம் தழைக்க பாடுபட்டவர்களில் முன்னோடியுமான ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சித்தி அடைந்ததை ஒட்டி வியாழக்கிழமை அவரது உடல் வேத முறைப்படி பிருந்தாவன பிரவேசம் செய்யப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
மகா பெரியவர் என பக்தர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் மகா சமாதி அமைந்துள்ள காஞ்சி சங்கர மடத்தின் பிருந்தாவனத்திலேயே ஜயேந்திரரின் உடல் பிரவேசமானது. 
உடல் நலக் குறைவு காரணமாக பொதுநிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்ளாமல் சங்கர மடத்திலேயே நித்திய கருமங்களை செய்து கொண்டு ஆன்மிகப் பணியாற்றி வந்த ஜயேந்திரருக்கு, புதன்கிழமை மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு காலை 7.45 மணிக்கு அவர் உயிர் இழந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இதையடுத்து, அவரது உடல் சங்கர மடத்துக்கு கொண்டு வரப்பட்டு, மடத்தின் பிருந்தாவனம் எதிரே அவர் பக்தர்களை சந்தித்து வந்த அறையில் வைக்கப்பட்டது. 
ஸ்ரீ ஜயேந்திரர் சித்தி அடைந்த தகவல் அறிந்து, ஆன்மிக உலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்தது. மடாதிபதிகளும், அனைத்து சமயப் பிரமுகர்களும், அரசியல் கட்சியினரும், ஏராளமான பக்தர்களும் காஞ்சிபுரத்திற்கு வந்தனர். மடத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர். இரவு முழுவதும் பக்திப் பாடல்களும், வேத பாராயணமும் நிகழ்த்தப்பட்டது. 
இதற்கிடையே ஜயேந்திரரின் திருவுடல் மகா பெரியவர் பிருந்தாவனத்தில் பிரவேசம் செய்யப்படும் என சங்கர மடம் அறிவித்தது. இதன்படி, ஜயேந்திரரின் பிருந்தாவனப் பிரவேசம் வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு தொடங்கியது. வேதங்கள் முழங்க 100 வேத விற்பன்னர்கள் வேத பாராயணம் செய்தனர்.
அப்போது ஜயேந்திரரின் திருவுடலுக்கு 11 திரவியங்களால் தலையில் சாளக்கிராம கற்கள் வைக்கப்பட்டு, அபிஷேகம் நடைபெற்றது. இதில் சந்தனம், மஞ்சள், இளநீர், தயிர், பன்னீர், பால், பழரசங்கள், பஞ்சாமிர்தம் போன்றவற்றைக் கொண்டு, இளைய மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் கைகளினால் அபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஜய ஜய சங்கர, ஜய ஜய சங்கர என பக்தி முழக்கமிட்டனர். ஜயேந்திரரின் மறைவைத் தாங்க முடியாத காஞ்சிபுரம் பக்தர்கள் கண்ணீர் மல்க குழுமியிருந்தனர். 
அதைத் தொடர்ந்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம், காமாட்சி அம்மன், வரதராஜ பெருமாள், கச்சபேஸ்வரர், ஏகாம்பரநாதர், உலகளந்த பெருமாள், மதுரை, ராமேசுவரம், காசி, காலடி, விழுப்புரம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கோயில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட பிரசாதங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

மகா சுவாமிகளின் பிருந்தாவனத்துக்கு அருகே ஜயேந்திர சரஸ்வதி சுவாமியின் பிருந்தாவன பிரவேசத்திற்குத் தயாரான இடம்.

மகா சுவாமிகளின் பிருந்தாவனத்துக்கு அருகே ஜயேந்திர சரஸ்வதி சுவாமியின் பிருந்தாவன பிரவேசத்திற்குத் தயாரான இடம்.


கங்கை நதி நீரைக் கொண்டு புனித நீராடல் மேற்கொள்ளப்பட்டது. பின்னர், ஜயேந்திரருக்கு புதுத் துணிகள் அணிவித்து, அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பிருந்தாவனத்துக்கு உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு ஜயேந்திரரை வைப்பதற்காக தோண்டப்பட்டிருந்த 4 அடி அகலம், 6 அடி நீளம் கொண்ட பள்ளத்தில் மூங்கில் கூடையில் நவ ரத்தினங்கள், பஞ்சலோகங்கள், வெள்ளி, தங்கம், உப்பு, வசம்பு, விபூதி போடப்பட்டு அதன் மேல் ஜயேந்திரர் உடலை அமரவைத்து தீபாராதனை செய்யப்பட்டது. 
அதன் பின்னர் பூஜைகள் செய்து, பள்ளத்தை மணல் கொண்டு மூடி, கருங்கல்லால் ஆன மூடியைப் போட்டு மூடினர். அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் கண்ணீர் மல்க சங்கரா , சங்கரா என பரவசத்தில் முழக்கமிட்டனர்.
தமிழக ஆளுநர், மத்திய அமைச்சர்கள் வருகை
ஜயேந்திரர் பிருந்தாவனப் பிரவேச நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் சதானந்த கெளடா, பொன். ராதாகிருஷ்ணன், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பெங்களூரு பிடதி ஆசிரமம் நித்தியானந்தர், பாஜக தேசிய பொதுச்செயலர் ராம்மாதவ், ஆர்எஸ்எஸ் தேசியப் பொதுச் செயலாளர் சுரேஷ் ஜோஷி, திருப்பதி தேவஸ்தான முன்னாள் தலைவர் பாபிராஜூ, விவசாயிகள்சங்கப் பொதுச்செயலாளர் பிஆர்.பாண்டியன் உள்பட ஏராளமான முக்கியப் பிரமுகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்: ஜயேந்திரர் பிருந்தாவன பிரவேச நிகழ்ச்சியையொட்டி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
கிராமக் கோயில்களில் மோட்ச தீபம்: சித்தியடைந்த ஸ்ரீ ஜயேந்திரர், காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சேவையாற்றியதோடு, கிராமக் கோயில்களில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாக்களிலும் பங்கேற்று சிறப்பித்துள்ளார். 
அதன்படி, இதுவரை சுமார் 7 ஆயிரம் கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்துள்ளார். 
எனவே, ஜயேந்திரரின் ஆன்மா சாந்தியடைய வேண்டி, கிராமக் கோயில்களில் மோட்ச தீபம் ஏற்ற வேண்டும் என காஞ்சி காமகோடி மடத்தின் சார்பில் கோரப்பட்டது. அதன்படி, காஞ்சிபுரத்திலுள்ள பிரசித்தி பெற்ற கோயில்கள் மற்றும் கிராமக் கோயில்களில் பக்தர்கள் வியாழக்கிழமை மாலை 5.30 முதல் 6 மணிக்குள் மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டனர்.

பிருந்தாவன பிரவேசத்திற்காக வியாழக்கிழமை ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சுமந்து செல்லும் பக்தர்கள்.

பிருந்தாவன பிரவேசத்திற்காக வியாழக்கிழமை ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சுமந்து செல்லும் பக்தர்கள்.


நல்லது செய்ய முன்வர வேண்டும்: விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
சித்தியடைந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜயேந்திரர் வழியில் அனைவரும் நல்லது செய்ய முன்வர வேண்டும் என சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காஞ்சி சங்கர மட பீடாதிபதி ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புதன்கிழமை சித்தியடைந்தார். இதையடுத்து, அவரது திருவுடல் பிருந்தாவனத்தில் பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, அவரது திருவுடலுக்கு காமகோடி பீடம் சார்பில், சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் உள்ளிட்டவற்றை விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செய்தார். இதையடுத்து, மகா பெரியவர் சமாதியின் இடது பக்கத்தில் ஜயேந்திரரின் திருவுடல் பிருந்தாவன பிரவேசம் செய்யப்பட்டது. 
அதன்பிறகு, விஜயேந்திரர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சித்தியடைந்த பெரியவர் ஸ்ரீ ஜயேந்திரர் மனிதநேயத்தின் அடையாளம். மனித நாகரிகத்தின் மறு உருவம். இந்து மக்களின் ஒளிவிளக்கானவர். இந்தியா பல மொழி, சமூகம், பொருளாதார நிலைகளைக் கொண்டது. இந்த நிலைகளில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவைப் பெற்றவர். பாரபட்சமின்றி அன்பு காட்டி, ஆசி வழங்கியவர். அவ்வகையில், அன்பு, அறம், கொடை, நல்ல எண்ணத்தால் நாட்டுக்கும், உலகுக்கும் பெருமை சேர்த்தவர். அனைத்துத் தரப்பு மக்களையும் அறிந்ததுடன், நாட்டையும் அறிந்தவர். தற்போது, அந்த ஒளிவிளக்கு இடம் பெயர்கிறது. எனவே, இறைபக்தி, தன்னம்பிக்கை எனும் அவர் பாதையைக் கடைப்பிடித்து, மக்கள் அனைவரும் நல்லது செய்ய முன்வர வேண்டும் என்றார் விஜயேந்திரர்.

தலைவர்கள் நேரில் அஞ்சலி

Story image


 ஜயேந்திரர் உடலுக்கு பல்வேறு தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன்: தமிழக கிராமங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சேவையாற்றினார். அயோத்தி பிரச்னையில் நடுநிலையாக இருந்து தீர்வு கண்டார். ஜயேந்திரரின் இந்த மத நல்லிணக்க முயற்சி ஒட்டுமொத்த நாட்டுக்கும் அமைதி அளிக்கும் விதமாக மாறியது. இறைவனோடு ஐக்கியமானதால், உடலைக் காண முடியாதவர்களுக்கு வருத்தமளித்தாலும், அவரது ஆன்மா நம்பிக்கை அளிக்கும் வகையில் அனைவரிலும் அருள்பாலிக்கும். 
மத்திய முன்னாள் ரயில்வே அமைச்சர் ஜாபர் செரீப்: நாட்டின் சமூக பிரச்னைகளைக் களைய பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். மத நல்லிணக்கவாதி, பல்வேறு சவால்களை எதிர்கொண்டவர். ஜயேந்திரருக்கு கர்நாடக மாநிலத்தில் திரளான பக்தர்கள் உண்டு. பக்தர்களை தேடிச் சென்று ஆசி வழங்கியவர். காமகோடி பீடத்தின் வாயிலாக அவர் செய்த அனைத்து வளர்ச்சி, மேம்பாட்டுப் பணிகளை தொடர்ந்து செய்வதற்கு அனைவரும் ஆதரவளிக்கவேண்டும். அவரை பிரிந்து வாடும் அனைத்து பக்தர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 

Story image


ஆர்.எஸ்.எஸ். தேசிய பொதுச்செயலர் சுரேஷ் ஜோஷி: ஜயேந்திரர் அறிவாற்றலும், செயல்திறனும் நிறைந்த வாழ்வு வாழ்ந்து சிவனடி சேர்ந்துள்ளார். இந்து சமூகக்தில் ஏதோ காரணங்களால் ஏற்பட்ட தீய பழக்கங்களைக் களைந்தவர். ஆதி சங்கரரின் பாரம்பரியத்தை பின்பற்றி, தாழ்த்தப்பட்ட பிரிவினரின் மேம்பாட்டுக்காகவே பல்வேறு தொண்டுகளில் அலாதி ஆற்றல், சங்கல்ப சக்தியினை வாழ்நாளில் அர்ப்பணித்துக் கொண்டவர். வேத தத்துவம், கலாசாரம் ஆகியவற்றை தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ப இசைவாக நிறுவியவர். இந்து சமுதாயம் முழுவதும் எந்த விதத்தில் பார்த்தாலும் மாசில்லாது, ஆற்றலோடு கட்டமைக்க வெற்றிகரமாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டவர். இன்று அவரது சரீரம் நம்மிடையை இல்லை என்றாலும், அவரது ஊக்கமூட்டும் நினைவு இந்து சமுதாயம் முழுவதற்கும் என்றும் சக்தி தரும். சங்கராச்சார்ய மரபில் வந்த அந்த போரொளி பரம் பொருளில் லயமாகியதையடுத்து, ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கத்தின் சார்பில் பணிவான ஸ்ரத்தாஞ்சலியை சமர்ப்பிக்கிறோம். 
அனைத்து விவசாயிகள் சங்க பொதுச்செயலர் பி.ஆர்.பாண்டியன்: காவிரி நதி நீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என உறுதியளித்தவர். இந்து, இஸ்லாமியர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், இணக்கமான சூழலை ஏற்படுத்தியவர். தாழ்த்தப்பட்ட மக்களின் குடிசைகளை தேடிச் சென்றதோடு, வீடுகளை கட்டித் தந்துள்ளார். அவரது இழப்பு பேரிழப்பாகும். 
மேலும், ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் வசீகரன், ஜனதாதள மாநிலச் செயலர் எல்லப்பன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.