ஊருக்காக உழைத்தவர்..! இணையில்லா இந்திரா
திருவள்ளூர் அருகே, 22 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு விளைநிலமாக மாற்றியதோடு, இந்திய அளவில் சிறந்த ஊராட்சியை உருவாக்கிஅனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் ஊராட்சி பெண்


இன்று உலக மகளிர் தினம்
திருவள்ளூர் அருகே, 22 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு விளைநிலமாக மாற்றியதோடு, இந்திய அளவில் சிறந்த ஊராட்சியை உருவாக்கிஅனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் ஊராட்சி பெண் தலைவர்களில் ஒருவரான இந்திரா வரதராஜன்(51).
தற்போதைய காலகட்டத்தில் கிராமங்களில் விவசாயம் அழிந்து வருவதைக் காரணம் காட்டி பலரும் பிழைப்புத் தேடி நகரங்களில் குடியேறி வருகின்றனர். இதை மாற்றும் வகையில் கிராமங்களில் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, விவசாயத்தையும் வளர்த்தவர் பாப்பரம்பாக்கம் கிராம முன்னாள் ஊராட்சித் தலைவர்.
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பாப்பரம்பாக்கம் கிராம ஊராட்சியில் பெரியார் நகர், அம்பேத்கர் நகர், செல்லியம்மன், மங்காத்தகுளம் ஆகிய பகுதிகள் அடங்கும். இக்கிராம ஊராட்சியைச் சேர்ந்தவர் இந்திரா வரதராஜன். இவரது கணவர் வரதராஜன் காவல் துணைக் கண்காணிப்பாளராக உள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
குடும்பத் தலைவி, குடிநீர் சுத்திகரிப்பு நிறுவன உரிமையாளர் மற்றும் விவசாயி என பன்முகத்தன்மை கொண்டவர் இந்திரா வரதராஜன். மேலும், ஏழை எளியவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல், வசதியற்றவர்களின் திருமணத்திற்குப் பயன்படும் வகையில் இலவசமாக பேருந்து அனுப்பி உதவுதல் போன்ற சேவைகளை செய்து வருகிறார்.
இந்நிலையில், மக்கள் சேவையில் முழுமையாக ஈடுபட விரும்பி, கடந்த 2010-11ஆம் ஆண்டில் உள்ளாட்சி தேர்தலில் பாப்பரம்பாக்கம் ஊராட்சித் தலைவராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
சுயமாக செயல்பட்டு.... தற்போதைய நிலையில் உள்ளாட்சி அமைப்புகளில் தலைவர்களாக பெண் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டாலும் சுதந்திரமாகவும், சுயமாகவும் செயல்படாத முடியாத நிலை உள்ளது.
ஆனால், கணவரின் தலையீடு இன்றி தானாகவே முன்னின்று சிறந்த நிர்வாகத் திறமையால் பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளார் இந்திரா. இவர் தலைவராக பொறுப்பேற்றபோது ஊராட்சி அலுவலக வளாகம் முள்புதர் மண்டிக் கிடந்ததை முதலில் சீரமைத்தார். தொடர்ந்து, கிராமத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஒவ்வொன்றாக செய்து கொடுத்துள்ளதோடு, 22 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்களையும் மீட்டு விளைநிலமாக மாற்றியுள்ளார்.
அடிப்படை வசதிகள்: இக்கிராம ஊராட்சியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சாலை, குடிநீர், சுகாதார வசதிகள் மற்றும், கால்நடைகளுக்கான மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் , சமுதாயக் கூடம், பள்ளிக் கட்டடம் ஆகியவற்றை எதிர்காலத்தில் விரிவாக்கம் செய்வதற்காக இடம் விட்டு, தொலைநோக்குச் சிந்தனையுடன் சுற்றுச்சுவர் அமைக்க வழி கோலினார்.
அதேபோல், அங்குள்ள ஏரி குளங்களை தூர்வாரி நீர் வரத்திற்கான கால்வாய்களையும் தடுப்பணை வசதியும் இவரால் ஏற்படுத்தப்பட்டது.
மேலும், பொது இடங்களை இயற்கை உபாதைக்கு பயன்படுத்துவதை மாற்றி, ஒவ்வொரு குடியிருப்புக்கும் சுகாதார வளாகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் நிறைவேற்றப்பட்டு பாப்பரம்பாக்கம் ஒரு முன்மாதிரி ஊராட்சியாகத் திகழ்கிறது. அதனால், வெளிநாடுகளில் இருந்தும், இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மக்களவைக் குழுவினர், சட்டப்பேரவைக் குழுவினர் உள்ளிட்ட பல்வேறு குழுவினர் இக்கிராமத்தைப் பார்வையிட்டுச் செல்கின்றனர்.
அதோடு, மாவட்ட ஆட்சியர்கள் பயிற்சி எடுக்கும் களமாகவும் பாப்பரம்பாக்கம் ஊராட்சி திகழ்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .
22 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு.... இன்றைய காலகட்டத்தில் பொதுச் சொத்துக்களை அபகரிப்போர் மத்தியில், ஆக்கிரமிப்பு செய்த 22 ஏக்கர் பரப்பளவிலான நிலங்களை பறிமுதல் செய்து, ஊராட்சியின் சொத்தாக மாற்றினார். அந்த நிலங்களைப் பண்படுத்தி, நீர்ப் பாசன வசதி ஏற்படுத்தி, அதில் 5 ஏக்கரில் விரைவில் பலன் தரக்கூடிய கொங்கு, தேக்கு மரங்களையும், 17 ஏக்கரில் வீரிய ஒட்டு ரகங்களான மா, பலா மரக்கன்றுகளையும் வைத்து பசுமையாக்கியுள்ளார். அதோடு தர்ப்பூசணி, தானியம், நிலக்கடலை வகைகளும் இங்கு சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஆண்டுதோறும் ஊராட்சிக்கு குறிப்பிட் ட அளவு நிரந்தர வருவாயும் கிடைத்து வருகிறது. அதேபோல், தீண்டாமை கடைப்பிடிக்காத சமரசம் உலாவும் இடமான மயானத்தை ஆக்கிரமித்திருந்த 3 ஏக்கரை மீட்டு சுற்றுச்சுவர் எழுப்பி அங்கு பசுமையான பூங்காவும் அமைத்துள்ளார்.
ஊராட்சிக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று... இக்கிராமத்தில் வேலைவாய்ப்புக்கான அடித்தள கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளார். படித்த இளைஞர்கள் தொழில் தொடங்கும் வகையில் மின்சாரக் கட்டமைப்பு வசதியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால் பல்வேறு நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்க முன்வந்துள்ளன.
இதன் மூலம் கிராமத்தில் படித்த 600-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளது. இதுபோன்ற அனைத்து வசதிகளும் உள்ளதால் இந்திய அளவில் ஐ.எஸ்.ஐ. தரச்சான்று முதன் முதலில் இந்த ஊராட்சிக்கு கிடைத்துள்ளதாகவும் அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
என்னென்ன செய்தார்..... பாப்பரம்பாக்கம் ஊராட்சி எங்குள்ளது என்ற நிலையை மாற்றி , பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து இந்தியாவிலேயே முதல் நிலை கிராமமாக மாற்றினார்.
தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ரூ.40 லட்சம் செலவில் மழை நீர் சேகரிப்பு குளம் அமைத்தல், விவசாயிகளை ஊக்குவிக்கும் கூட்டுறவு வங்கி அமைத்தல், விளைநிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் ரூ.1 கோடியில் ஏரி சீரமைத்தல், ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை, நவீன சமுதாயக் கூடம் அமைத்தல், பள்ளியை தரம் உயர்த்துதல், பசுமை வீடுகள் திட்டம், இணையதள வசதியுடன் நவீன ஊராட்சி மன்ற அலுவலகம், சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகித்தல், சாலைகள் மேம்பாடு ஆகிய பணிகளை நிறைவேற்றி, பேருந்து வசதிக்கும் வழிவகுத்தார்.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பெரிய அளவிலான 10-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளை இங்கு அமைத்து, 500-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புக்கு வழி செய்தார்.
அத்துடன் அரசு சார்பில் விழாக்கள் நடத்துதல், அரசுத் திட்ட விளம்பரப் படப்பிடிப்புகள் நடத்துதல் ஆகியவற்றுக்கும் இக்கிராமம் பயன்படுத்தப்படுகிறது.
இங்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கும் முன்னோடியாக உள்ளதால் மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் மத்தியக்குழுவினர் ஆகியோர் பார்வையிட்டுச் செல்கின்றனர்.
சிறந்த நிர்வாகத்துக்கு விருதுகள்....கிராமத்தில் சிறந்த நிர்வாகத் திறமையால் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதற்காக 2013-இல் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கிடம் இருந்து சிறந்த ஊராட்சி விருதுடன் ரூ.7 லட்சத்திற்கான காசோலையையும் பெற்றார்.
ஊராட்சியில் முழு சுகாதாரத் திட்டத்தை செயல்படுத்தியதற்காக அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து விருது மற்றும் ரூ.5 லட்சம் காசோலையும், பிளாஸ்டிக் இல்லாத ஊராட்சியாக மாற்றியதற்காக விருது மற்றும் ரூ.5 லட்சம் காசோலையும் இன்னும் பல்வேறு விருதுகளும் பரிசுகளும் பெற்றுள்ளார்.
இதுகுறித்து இந்திரா கூறியது: கல்லூரிப் பருவத்திலிருந்தே சமூக சேவையின் மீது அதிக நாட்டம் கொண்டிருந்தேன். அதிலும் பெண்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் அனைத்துத் துறையிலும் தன்னிச்சையாக செயல்பட்டு வெற்றிபெற முடியும் என்று நம்பிக்கை கொண்டிருந்தேன்.
இதற்கு முன்பு என்னுடைய தாத்தா ஊராட்சித் தலைவராக செயல்பட்டார். அப்போது அவரைப் பார்த்து, நானும் ஒரு தலைவராக வரவேண்டும் என விரும்பி, அதேபோல் தலைவரானேன். சில எதிர்ப்புகள் இருந்தாலும், பலரது ஆதரவு இருந்ததால் வளர்ச்சிப் பணிகளைத் திறம்பட செய்து இந்த சாதனைகளை எட்ட முடிந்தது என அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...