
புதுச்சேரியில் மூடிக் கிடக்கும் பொதுத் துறை, கூட்டுறவுத் துறை பஞ்சாலைகளை ஒருங்கிணைத்து உயர் தொழில்நுட்ப ஜவுளிப் பூங்கா உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
புதுச்சேரியின் முக்கிய அடையாளங்களில் ரோடியர் பஞ்சாலை என அழைக்கப்படும் ஏ.எப்.டி. பஞ்சாலையும் ஒன்று. சுமார் 50 ஏக்கருக்கு மேல் முதலியார்பேட்டையில் இந்த ஆலைக்கு நிலம் உள்ளது. இந்தப் பஞ்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.
இத்தகைய பெருமைமிக்க இந்த ஆலையில் ஒரு காலத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். தேசிய பஞ்சாலைக் கழகத்தின் (என்.டி.சி.) கீழ் இருந்த ஏ.எப்.டி. ஆலையை புதுவை அரசு எடுத்துக் கொண்டது. ஆனால், ஆலை விரிவாக்கம், நிர்வாகத்தின் தவறான செயல்பாடுகள், முறைகேடுகள் ஆகியவற்றால் லாபத்தில் இயங்கி வந்த பஞ்சாலை நலிவடைந்தது.
தற்போது 650 தொழிலாளர்களே பணியாற்றி வருகின்றனர். இதில், அதிகாரிகள் மட்டும் முழு ஊதியம் வாங்குகின்றனர். தொழிலாளர்களுக்கு லே -ஆப் வழங்கப்படுகிறது. மாதம் ரூ. 35 லட்சம் லே-ஆப் ஊதியமாக வழங்கப்படுகிறது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக ஏ.எப்.டி. பஞ்சாலை இயங்காத நிலை ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு பணப் பயன்களை வழங்க பட்டானூரில் உள்ள நிலத்தை விற்க நிர்வாகம் முயற்சி மேற்கொண்டுள்ளது. மத்திய அரசிடம் ஆலை புனரமைப்புக்காக ரூ. 500 கோடி கோரியும் இதுவரை தரப்படவில்லை.
சுதேசி, பாரதி பஞ்சாலைகள்: அதேபோல, லாபத்தில் இயங்கி வந்த சுதேசி, பாரதி பஞ்சாலைகளை மூடப் போவதாக கடந்த 2005-ஆம் ஆண்டு என்டிசி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. அதைத் தொடர்ந்து, இடதுசாரி தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள் போராட்டத்தின் விளைவாக புதுவை மாநில அரசின் வசம் இரு ஆலைகளும் வந்தன.
சுதேசி ஆலையில் 3,500 பேர், பாரதி ஆலையில் 3,000 பேர் என கடந்த 1994-ஆம் ஆண்டு வரை பணியாற்றி வந்தனர். தற்போது, இந்த நிலை படிப்படியாக மாறி, பாரதி ஆலையில் 350, சுதேசி ஆலையில் 150 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.
அதேபோல, காரைக்கால் ஜெயப்பிரகாஷ் கூட்டுறவு நூற்பாலை, திருபுவனை கூட்டுறவு நூற்பாலை ஆகியவையும் மூடிக் கிடக்கின்றன. இந்த 5 ஆலைகளையும் ஒருங்கிணைத்து ஏ.எப்.டி. ஆலையை மையமாக வைத்து உயர்தொழில்நுட்ப ஜவுளிப் பூங்காவை உருவாக்கினால், புதுவையில் ஜவுளித் தொழில் மேம்படுவதுடன், வேலைவாய்ப்பும் பெருகும் என்கின்றனர் தொழிலாளர்கள்.
கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது, நாடு முழுவதும் 11 இடங்களில் ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும் என அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். தமிழகத்திலும் ஒரு பட்டு ஜவுளிப் பூங்காவுக்கு அனுமதி வழங்கப்பட்டது. சுதேசி, பாரதி ஆலைகளை மாநில அரசிடம் ஒப்படைக்கும் விழாவில் பங்கேற்ற அப்போதைய மத்திய ஜவுளித் துறை அமைச்சர் சங்கர் சிங் வகேலா புதுவையில் ஜவுளிப் பூங்கா அமைக்க உதவி செய்வதாக உறுதியளித்தார்.
ஏ.எப்.டி., சுதேசி, பாரதி பஞ்சாலைகள் ஆகியவை ஒரு கி.மீ. சுற்றளவுக்குள்ளேயே உள்ளன. இங்கு பாதுகாப்பான இடம், மின்சாரம், தண்ணீர் வசதிகள் உள்ளன. எனவே, மூன்று ஆலைகளையும் ஒருங்கிணைத்து ஜவுளிப் பூங்கா அமைப்பது எளிதாகும். அதிக நிதியும் தேவைப்படாது என்பது தொழிற்சங்க நிர்வாகிகளின் கருத்தாக உள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி பஞ்சாலைத் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் வி.எஸ்.அபிஷேகம் கூறியதாவது:
பஞ்சாலைகளில் உற்பத்தியான துணிகள் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இதன் மூலம், கடந்த 1990-ஆம் ஆண்டு வரை மத்திய அரசுக்கு ரூ. 150 கோடி வரை அந்நியச் செலாவணி கிடைத்து வந்தது.
ஏ.எப்.டி., சுதேசி, பாரதி பஞசாலைகளை இணைத்து ஜவுளிப் பூங்காவை அமைக்க வேண்டும். ஆலை வளாகங்களில் ஜவுளிப் பூங்கா அமைக்கத் தேவையான அடிப்படை வசதிகள் உள்ளன. மூன்று பஞ்சாலைகளிலும் சாயப்பட்டறைகள் நல்ல நிலையில் உள்ளன. தண்ணீர் வசதியும் உள்ளது.
ஜவுளிப் பூங்கா அமைக்கப்பட்டால் 22 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், பின்னலாடை, தையல், ஆயுத்த ஆடை உற்பத்தி என 10 ஆயிரம் பெண்கள் உள்பட 40 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். ஆலைகள் புனரமைப்புக்கு ரூ. 500 கோடி மானியம் கோருவதைக் காட்டிலும், மத்திய ஜவுளி மேம்பாட்டுக் கழகத்திடம் இருந்து நிதி உதவி பெற்று, புதுச்சேரி பஞ்சாலைகளை மேம்படுத்த நிதியைப் பெறலாம்.
புதுவை முதல்வராக சண்முகம் பதவி வகித்த காலத்தில், மாநில அரசின் நிதியிலிருந்தே அவர் ரூ. 104 கோடி வரை நிதி ஒதுக்கினார். அதேபோல, தற்போதும் ஆலை புனரமைப்புக்காக மாநில அரசே நிதியை ஒதுக்க இயலும்.
முதல்வர் நாராயணசாமி 3 பஞ்சாலைகளையும் ஒன்றிணைத்து ஜவுளிப் பூங்காவை அமைக்கும் திட்டத்தைத் தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும். இதனால், மாநில அரசுக்கும் வருவாய் கிடைக்கும். வர்த்தகமும் அதிகரிக்கும் என்றார் அவர்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் அ.மு.சலீம் கூறியதாவது:
புதுச்சேரியில் பொதுத் துறை, கூட்டுறவு ஆலைகளை ஒருங்கிணைத்து ஜவுளிப் பூங்கா அமைக்க ரூ. 1,900 கோடி முதலீடு தேவை. இதில் ரூ. 400 கோடி மட்டும் அரசு முதலீடு செய்தால் போதுமானது. மீதமுள்ள இயந்திரங்கள் வாங்குதல் உள்ளிட்டவற்றுக்கு தேவையான முதலீடுகளைக் கடனாக ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் வழங்கத் தயாராக உள்ளன.
இங்கு உற்பத்தி செய்யப்படும் துணிகளை புதுவையில் உள்ள கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், அரசுத் துறைக்கான சீருடைகள் உள்ளிட்டவற்றுக்குப் பயன்படுத்த முடியும். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யலாம். இதனால் கிடைக்கும் லாபத்தால், புதுவையில் நிதி நெருக்கடிக்குத் தீர்வு ஏற்படும். பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.