ரூ.2.81லட்சம் கோடி முதலீட்டில் சென்னை-கன்னியாகுமரி இடையே தொழில் வழித்தடத் திட்டம் 

தமிழக கடற்பகுதிகளையும் துறைமுகங்களையும் மேம்படுத்தும் வகையில் சென்னை-கன்னியாகுமரி இடையே ரூ.2.81லட்சம் கோடி முதலீட்டில் தொழில் வழித்தடத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
ரூ.2.81லட்சம் கோடி முதலீட்டில் சென்னை-கன்னியாகுமரி இடையே தொழில் வழித்தடத் திட்டம் 
Published on
Updated on
2 min read

தமிழக கடற்பகுதிகளையும் துறைமுகங்களையும் மேம்படுத்தும் வகையில் சென்னை-கன்னியாகுமரி இடையே ரூ.2.81லட்சம் கோடி முதலீட்டில் தொழில் வழித்தடத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
தொழில் நிறுவனங்கள் அமைந்தால் அப்பகுதிகளில் உள்ள சிறு நகரங்கள், கிராமங்கள் அனைத்திலும் தொழில் வளர்ச்சி அதிகரிப்பதோடு, கட்டமைப்பு வசதிகள் குறிப்பாக குடிநீர், மின்சாரம், சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை, சுகாதாரம் போன்றவையும் மேம்படும். நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் தொழில் வளாகங்கள் அமைப்பதன் மூலம் வேலைவாய்ப்புகள் கணிசமாக அதிகரிக்கும். இதனால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். 
திட்ட அறிக்கை: கிழக்கு கடற்கரை பொருளாதார வழித்தடத்தின் ஒரு அங்கமாக செயல்படுத்தப்படும் இத் தொழில் வழித்தடத் திட்டம் மத்திய-மாநில அரசுகள் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கிக் கடனுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் பரிசீலனையில் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
2020-க்குள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முயற்சி: முதல் கட்டமாக மதுரை-விருதுநகர்-திண்டுக்கல்-தேனி, தூத்துக்குடி-திருநெல்வேலி பகுதிகளில் இத்திட்டம் தொடங்கப்படவுள்ளது. இப்பகுதிகளில் தொழில் வழித்தடத் திட்டம் அமைக்க ரூ.91ஆயிரம் கோடி முதலீடு தேவைப்படுவதாக ஆசிய வளர்ச்சி வங்கியின் திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 10 ஆயிரத்து 650 ஹெக்டேர் பரப்பளவில் தூத்துக்குடி-திருநெல்வேலி இடையே தொழில் வழித்தடம்அமைக்க ரூ.51 ஆயிரத்து 404 கோடி, மதுரை-விருதுநகர்-திண்டுக்கல்-தேனி இடையே அமைக்க ரூ.40 ஆயிரத்து 414 கோடி முதலீடு தேவைப்படுவதாகவும் அந்த வங்கி தெரிவித்துள்ளது. வரும் 2020-க்குள் பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அரசுக்கு அளிக்கப்பட்ட வங்கி திட்ட அறிக்கை: இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஆசிய வளர்ச்சி வங்கி திட்ட அறிக்கை ஒன்றை தயாரித்து தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கை விவரம்:
சென்னை-கன்னியாகுமரி இடையே தொழில் வழித் தடத் திட்டத்தின் கீழ் தொழிற்பூங்காக்கள் அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கியுள்ளன. 23 மாவட்டங்களை உள்ளடக்கியதாக செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டம் மூலம் தமிழகத்தில் 64 சதவீதப் பகுதிகள் பயன்பெறும்.
ரூ.2.81 லட்சம் கோடி முதலீடு: இத்தொழில் வழித்தடத் திட்டம் சென்னையிலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக சுமார் 800 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்படவுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 45 மற்றும் 7 -ஐ இணைக்கும் வகையிலும், எண்ணூர், சென்னை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள இனையம் துறைமுகங்கள் வழியாகவும் இத் தொழில் வழித் தடத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 
குறிப்பாக எண்ணூர் மற்றும் சென்னைத் துறைமுகம், கடலூர்-நாகப்பட்டினம், அரியலூர்-பெரம்பலூர், திருச்சி-புதுக்கோட்டை-சிவகங்கை, தூத்துக்குடி-திருநெல்வேலி, மதுரை-திண்டுக்கல்-விருதுநகர்-தேனி போன்ற மாவட்டங்கள் வழியாக அமைக்கப்படவுள்ள இத்திட்டத்துக்கு ஒட்டுமொத்தமாக (சென்னை-கன்னியாகுமரி) ரூ.2.81 லட்சம் கோடி முதலீடு தேவைப்படுகிறது. 
இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, திண்டுக்கல், விருதுகர், தேனி ஆகிய பகுதிகளில் சாலைப் போக்குவரத்து மேம்படுவதோடு, ரயில், விமானப் போக்குவரத்தும் விரிவடையும். மேலும் இப்பகுதிகளில் நிலவும் குடிநீர் பற்றாக்குறை நீங்கும். இதற்காக இப்பகுதியின் மொத்த திட்ட மதிப்பில் 55 சதவீதம் நிதி தேவைப்படுகிறது. இதை மத்திய அரசின் அடல் நகர்ப்புற மேம்பாடு மற்றும் புதுப்பிக்கும் திட்டத்தின் கீழ் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பங்கு பத்திரம் மூலம் நிதி: இந்நிதியை மத்திய அரசின் தேசிய தொழில்பூங்கா வளர்ச்சி மற்றும் அமல்படுத்தும் டிரஸ்ட் மூலம் பங்கு பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தினால் 47 லட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் கிடைக்கும். தொழிற்சாலைகளின் உற்பத்தி 2035-ஆம் ஆண்டு 222 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கும். 23 மாவட்டங்களில் உள்ள உற்பத்தித் தொழில் நிறுவனங்களில் 58 சதவீதத் தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தில் இணைக்கப்படும். 
சவால்கள் நிறைந்த திட்டம்: இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ள மிகப்பெரிய சவால் நிலம் கையகப்படுத்துதல். அத்துடன், நகர்ப்புறங்களுக்கு இணையான வசதியை இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ள பகுதிகள் அனைத்துக்கும் கொண்டு வருவது. காரணம் குறைந்த செலவில் நிலத்தை ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவுக்கு கையகப்படுத்த வேண்டும். வளர்ச்சியே இல்லாத பகுதிகளை மற்ற இடங்களுக்கு இணையாக மேம்படுத்துவது போன்ற சவால்களை சந்திக்க வேண்டும்.
மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை, தமிழக அரசு ஆகியவை இத் திட்டத்தை விரைந்து செயல்படுத்தவும், அதற்கான அனைத்து நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அனுமதி வழங்வும் இருப்பதாக துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் மத்திய-மாநில அரகளால் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால் தென் தமிழகத்தில் உள்ள பின்தங்கிய மாவட்டங்கள் தொழில், பொருளாதார ரீதியாக மேம்பாடு அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com