கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சாலை விபத்து: அமைச்சர் ஜெயகுமாரின் உதவியாளர், அவரது இரு மகன்கள் பரிதாப பலி
வேப்பூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே புதனன்று காலை நடந்த சாலை விபத்தில், அமைச்சர் ஜெயகுமாரின் உதவியாளர், அவரது இரு மகன்கள் பரிதாபமாக பலியானார்கள்.
சென்னை மேடவாக்கத்தை சேர்ந்தவர் லோக நாதன் (வயது 60). மீன்வளத்துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமாரிடம் மூத்த உதவியாளராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இவர் தனது மகன்கள் சிவராமன் (40), நிர்மல்குமார் (35) மற்றும் மருமகள், பேத்தியுடன் தீபாவளி கொண்டாடுவதற்காக சொந்த ஊரான கரூர் தான்தோன்றி மலைக்குச் சென்றுள்ளார். அங்கு தீபாவளி கொண்டாட்டங்கள் முடிந்த பின்னர் புதன் காலை அங்கிருந்து காரில் குடும்பத்தினருடன் சென்னை புறப்பட்டார்.
அவர்கள் பயணம் செய்த கார் புதன் காலை 6.30 மணியளவில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கூத்தக்குடி ரெயில்வே மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது வேப்பூரில் இருந்து கள்ளக்குறிச்சியை நோக்கி அரசு பஸ் அவர்களது காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் ஓட்டுநர் திடீரென்று பஸ்சை எதிர்பாராதவிதமாக வளைவில் திருப்பினார். இதனால் பின்னால் வந்து கொண்டிருந்த கார் நிலை தடுமாறி பஸ்சின் பின்புறம் வேகமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த லோகநாதன், சிவராமன், நிர்மல்குமார் ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். லோகநாதனின் மருமகள் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தார். உடனிருந்த சிறுமி காயமின்றி உயிர் தப்பினாள்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்த பெண்ணை போலீசார் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.