

அரசுத் துறைகளின் நிர்வாகத் தேவைக்கான பொருள்களைக் கொள்முதல் செய்து கொள்ளும் ஆர்டர்களில் தொழில் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று ஏற்கெனவே வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை துறை சார்ந்த அலுவலர்கள் யாரும் பின்பற்றுவதில்லை என்ற வேதனைக் குரல் எழுகிறது.
கூட்டுறவு அமைப்புகளில் அனைத்து மாவட்டங்களிலும் வணிக உற்பத்தி மேம்பாட்டுக்காக தொழில் கூட்டுறவு சங்கங்கள் சில பத்தாண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டன. அதாவது, ஒரு மாவட்டத்தின் பிரதான தொழிலாகக் கருதப்படுவதில் திறன் கொண்டவர்களை ஒருங்கிணைத்து, தொழில் கூட்டுறவுச் சங்கங்கள் உருவாக்கப்பட்டன. அந்தச் சங்கங்களுக்கு ஏராளமான நிதி உதவிகளும் வழங்கப்பட்டன.
இச் சங்கங்களைப் பாதுகாக்கும் வகையில், அரசுத் துறை நிறுவனங்கள் தங்களது நிர்வாகத் தேவைக்கானஆர்டர்களைக் கொடுக்கும்போது, தொழில் கூட்டுறவு சங்கங்களின் ஒப்பந்தப்புள்ளியில் 15 சதவீத விலை அதிகமாக இருந்தாலும், முன்னுரிமை வழங்க வேண்டும் என கடந்த 2001இல் சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டது. ஆனால், காலப்போக்கில் இந்த உத்தரவுகள் பின்பற்றப்படுவதில்லை.
எடுத்துக்காட்டாக, தருமபுரி மாவட்ட பாலிதீன் தொழில் கூட்டுறவுச் சங்கம் கடந்த 1980-இல் தொடங்கப்பட்டது. அப்போது சங்கத்தின் உறுப்பினர்கள் 65 பேர். தற்போது 36 பேர் மட்டுமே உள்ளனர்.
(பாலிதீன் பைகள் தடை தீவிரமாக வந்தாலும், பால் பொருள்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது!)
வேளாண் துறை மற்றும் வனத் துறையினரின் நாற்றங்கால்களுக்குத் தேவைப்படும் பாலிதீன் பைகள், ஆவின் நிறுவனத்தினர் பால், பால்கோவா உள்ளிட்ட பொருள்களுக்கான பைகள் இங்கிருந்துதான் ஆர்டர் கொடுத்து வாங்கப்பட்டன.
ஆனால், அண்மைக் காலமாக அரசுத் துறை சார்ந்த ஆர்டர்கள் கிடைப்பதில்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர் இந்தத் தொழில் கூட்டுறவுச் சங்கத்தின் உறுப்பினர்கள்.
தனியார் நிறுவனங்கள் பொருளின் தரத்தைக் குறைத்து- அதன் மூலம் விலையையும் குறைத்துத் தரும் ஒப்பந்தப்புள்ளிகள் ஏற்கப்படுகின்றன என்பதால், எங்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்படுகிறது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
இதேபோன்ற நிலைதான் அச்சு உள்ளிட்ட பல்வேறு தொழில் கூட்டுறவு சங்கங்களுக்கும்.
எனவே, அரசுத் துறை நிறுவனங்களுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரும்போது தொழில் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை வழங்கும் புதிய திட்ட வடிவை மாநில அரசு உருவாக்கி, அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் கட்டாயம் அமலாக்கம் செய்யக் கூறி அறிவித்திட வேண்டும் என தொழில் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.