

நாமக்கல்: ஆட்சியாளர்களின் பாராமுகம், ஆசிரம தயாரிப்பு பொருட்களுக்கு 18% வரை விதிக்கப்படும் ஜிஎஸ்டி போன்றவற்றால் திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் படிப்படியாக மூடப்படும் என்று அஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த ஆண்டை கொண்டாடும் இந்த வேளையில், அவர் வந்து தங்கிச் சென்று இந்த ஆசிரமத்தைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இந்திய சுதந்திரப் போராட்டம் தீவிரம் பெறத் தொடங்கியிருந்த 1925-ஆம் ஆண்டில் ராஜாஜியால் ஆரம்பிக்கப்பட்டது திருச்செங்கோடு காந்தி ஆசிரமம். திருச்செங்கோடு அருகே புதுப்பாளையம் என்ற இடத்தில் 26 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது இந்த ஆசிரமம். காந்திய கொள்கைகளைப் பரப்பவும், கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தவும், சுதந்திர வேட்கையைத் தூண்டவும் இந்த ஆசிரமத்தைப் பயன்படுத்த ராஜாஜி விரும்பினார்.
சுதந்திரப் போராட்ட வரலாற்றுடன் தொடர்புள்ள இடம் என்பதுடன், காந்திஜி வலியுறுத்திய சுய சார்புப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் கதர் உற்பத்தி போன்றவையும் இங்கு நடைபெற்று வருகிறது. ஆசிரமத்தில் கதர் பொருள்கள், சோப்பு போன்றவை தயாரிக்கப்படுகின்றன.
உள்ளூர் மூலப் பொருட்களைக் கொண்டு, உள்ளூர் மக்களால் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளூர் மக்கள் பரிவர்த்தனை செய்வதால் மேம்படுவதே கிராமியப் பொருளாதாரம். உள்ளூரில் பஞ்சை கொடுத்து நூல் நூற்கச் செய்து, அந்த நூலை காந்தி ஆசிரமம் வாங்கிக் கொண்டது.
இலவங்காய் உடைத்தல், கதர் உற்பத்தி, நெசவு, ஊதுபத்தி செய்தல், இலவம் பஞ்சு மெத்தை - தலையணை தயாரித்தல் போன்ற தொழில்கள் மூலம் ஆயிரக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்பு பெற்று வந்தனர். உள்ளூர் பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்து வந்தது. கணவனை இழந்த பெண்கள், ஆதரவற்றோர் கிராமியத் தொழில்கள் மூலம் பொருள் ஈட்டி சொந்தக் காலில் நின்றனர். அதே நேரத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பாசறையாகவும், மது ஒழிப்பு மையமாகவும் திகழ்ந்தது திருச்செங்கோடு காந்தி ஆசிரமம். இப்படிப்பட்ட காந்தி ஆசிரமம் தற்போது மெல்ல, மெல்ல நொடித்த நிலைக்குத் தள்ளப்பட்டு வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர் இங்கு பணியாற்றுபவர்கள்.
இதுகுறித்து ஆசிரம செயலர் எம். குமார் தெரிவித்தது: திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் மொத்தம் 53 வகையான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த பொருட்கள் ஆசிரமத்தின் கட்டுப்பாட்டில் நாமக்கல், சேலம், ஈரோடு, திருச்சி மாவட்டங்களில் உள்ள 24 கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த 2017 மார்ச் மாதம் வரையிலான 10 ஆண்டுகளில், ஆண்டுக்கு சராசரி ரூ.10 கோடி வரை விற்பனை இருந்தது. இப்போது ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு இங்கு தயாரிக்கப்படும் பொருட்களுக்கும், 5% முதல் 18% வரை வரி விதிக்கப்படுகிறது. வேப்பம் பிண்ணாக்குக்கூட 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.
கடந்த 70 ஆண்டுகளில் காதி பொருட்கள் எதற்கும் 1% கூட வரி விதிக்கப்படவில்லை. இப்போது ஜிஎஸ்டி காரணமாக காதி தயாரிப்புகளின் விலை அதிகரித்துள்ளது. இதனால் வெளிச் சந்தையில் போட்டியிட முடியாத நிலையில், இங்கு இயங்கி வந்த இரும்புக் கட்டில், பீரோ போன்றவை தயாரிக்கும் அலகில் கடந்த ஓராண்டாக உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் சோப், மெத்தை, பட்டுச் சேலை போன்றவற்றின் விற்பனையும் 10 முதல் 20% வரை குறைந்துள்ளது. இதனால் கடந்த ஓராண்டில் விற்பனை ரூ.2 கோடி வரை சரிவடைந்துள்ளது.
விற்பனை குறைந்துள்ளதால், லாபமும் குறைந்துள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் அளிப்பது, நிர்வாகச் செலவுகளை சமாளிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தற்போது மூலப் பொருட்கள் வாங்கப் போதிய பொருளாதார வசதி இல்லை. இங்கு தயாராகும் சோப்புகளை ராணுவத்திற்கு மத்திய அரசு கொள்முதல் செய்து வந்தது. இப்போது அது நிறுத்தப்பட்டுள்ளது. காந்தி ஆசிரம பொருட்களின் உற்பத்தியும் கணிசமாகக் குறைந்துவிட்டது. போதிய ஆர்டர் இல்லாததால், இங்கு இருந்த இரும்பு கட்டில், இரும்பு பீரோ போன்றவை தயாரிக்கும் பிரிவு கடந்த ஓராண்டுக்கும் மேல் மூடப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்து, இங்கு நடைபெறும் தொழில்கள் அனைத்தும் படிப்படியாக மூடப்பட்டால் சில ஆண்டுகளில் ஆசிரமத்தையே பூட்டிவிட வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.
மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தினம் கொண்டாடப்படும் இந்த வேளையில், அவரால் வளர்த்தெடுக்கப்பட்ட காதி தயாரிப்புகளைப் பாதுகாத்திட ஜி.எஸ்.டி.யிலிருந்து முழுமையான விலக்கு அளிக்க வேண்டும். மேலும் காந்தி ஆசிரம் போன்ற காதி தயாரிப்பு நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியம் வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்றார்.
இருநூறு ஊழியர்கள் பணியாற்றி வந்த இந்த இடத்தில், 75 பேர் மட்டுமே தற்போது உள்ளனர். காந்தி ஆசிரமம் மூலம் 35 விற்பனை நிலையங்கள் இயங்கிய இடத்தில் இப்போது 20 மட்டுமே செயல்படுகின்றன. ராஜாஜி பிறந்த தருமபுரி மாவட்டத்திலேயே காவேரிப்பட்டினம், பாலக்கோடு, கிருஷ்ணகிரி, ஒசூர் போன்ற இடங்களில் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
கடந்த 1925-ஆம் ஆண்டும், 1934-ஆம் ஆண்டும் ஆசிரமத்துக்கு வருகை தந்தார் காந்திஜி. தனது இரு வருகைகளின்போதும், ஆசிரமத்தில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தார். அவர் இங்கு தங்கிய அனுபவங்கள் குறித்து அவரே எழுதிய குறிப்பு ஆசிரம அலுவலகத்தில் இன்றளவும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
மகாத்மா காந்தி, ராஜாஜி, பண்டித நேரு, காமராஜர் உள்ளிட்டோர் ஆசிரமத்துக்கு வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், அவர்களது கையால் எழுதிய குறிப்புகள் போன்றவை இன்றளவும் ஆசிரமத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ள "ராஜாஜி அறை' என்று அழைக்கப்படும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. அதுபோல், ஆசிரமத்தைத் தொடங்கிய ராஜாஜி, 10 ஆண்டுகள் தங்கிய அறை, அவர் பயன்படுத்திய பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் ஆசிரமத்துக்கு வந்து பார்வையிட்டு, ஆசிரமத்தின் பெருமை மற்றும் சுதந்திர போராட்ட கால வரலாற்றை அறிந்து கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன. எனினும் போதிய நிதியின்மை காரணமாக ஆசிரமத்தில் உள்ள தேசத் தலைவர்களின் நினைவுக் குறிப்பு உள்ளிட்டவற்றைப் பராமரிப்பு செய்வதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன.
மத்திய, மாநில அரசுகள் உரிய கவனம் செலுத்தி, காந்தி ஆசிரமம் தொடர்ந்து சீராகச் செயல்பட ரூ. 2 கோடி அளவுக்கு பொருளாதார உதவிகளை செய்ய வேண்டும், ஜிஎஸ்டி விலக்கு வேண்டும் என்ற கோரிக்கைகளை ஆசிரம ஊழியர்கள் முன்வைக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.