/

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

வடஅந்தமான் கடல் பகுதி மற்றும் அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் தற்போது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:00 pm

DIN

வடஅந்தமான் கடல் பகுதி மற்றும் அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் தற்போது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது  காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அடுத்த 3 நாள்களில் ஒடிஸா கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை  கூறியதாவது:
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த வலுவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக  வலுவடைந்துள்ளது. இது  தற்போது  லட்சத்தீவுகளில் உள்ள மினிகாய் தீவுக்கு மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் 920 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இது அடுத்து வரும் 24 மணி நேரத்தில் புயலாக வலுவடைந்து, ஓமன் கரையை நோக்கி நகரக்கூடும்.
புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி: வடஅந்தமான் கடல் பகுதி மற்றும் அதை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் தற்போது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுப்பெற்று, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக அடுத்து வரும் 3 நாள்களில் ஒடிஸா கரையை நோக்கி நகரக்கூடும். 
மீனவர்களுக்கு எச்சரிக்கை:  தெற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதியில் அக்டோபர் 12- ஆம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அதேபோல  வங்கக்கடலில், தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதி, அந்தமான் கடல் பகுதிகளுக்கு அக்டோபர் 9-ஆம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள். 
மிதமான மழை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரு நாள்களுக்கு  மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகரில்  லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்றார் எஸ்.பாலச்சந்திரன்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 130 மி.மீ.:  ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாக புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் 130 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில், அம்பாசமுத்திரம், நீலகிரி மாவட்டம் குன்னூர் ஆகிய இடங்களில் தலா 80 மி.மீ., திருப்பூர், தென்காசியில் 70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. 
வடகிழக்குப் பருவமழை:  தமிழகம், கேரளம், புதுச்சேரி, ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் வடகிழக்குப் பருவமழை திங்கள்கிழமை (அக். 8) தொடங்குவதற்கு சாதகமான சூழல் உள்ளது என்றார் பாலச்சந்திரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.