சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: தலைவர்கள் கண்டனம்

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காததற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு

News image
Updated On :3 செப்டம்பர் 2018, 8:01 pm


பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காததற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின் (திமுக): பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 82-ஆகவும், டீசல் ரூ.75-ஆகவும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துவிட்ட நிலையிலும், வீழ்ச்சி அடைந்து வரும் ரூபாயின் மதிப்பைச் சரி செய்ய மத்திய அரசு எவ்வித பொருளாதார நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. 
எட்டாத உயரத்துக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு அனுமதி அளித்துவிட்டு, ஒரு லிட்டர் டீசலை ரூ.34, ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ.38 விலையில் ஏற்றுமதி செய்வது எந்த வகை நியாயம்? 
இந்த முடிவு மிக மோசமான முரண்பாடு இல்லையா? இது தேச நலனை வஞ்சிப்பதாகாதா? இவற்றுக்கெல்லாம் வெளிப்படையாக விளக்கம் அளிக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு.
பொதுப் போக்குவரத்து, பொருள் போக்குவரத்து, அத்தியாவசியப் பொருள்களின் விலை போன்ற பல்வேறு முனைகளிலும், பெட்ரோல், டீசல் விலை உயர்வின் தாக்கத்தைக் குறைப்பதற்கு, விற்பனை வரியைக் குறைப்பது உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதையும் தமிழக அரசும் எடுக்காமல் இருப்பது மிகவும் பொறுப்பற்ற செயலாகும். பெட்ரோல் டீசல் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கலால் வரியையும், தமிழக அரசு விற்பனை வரியையும் குறைக்க வேண்டும் .
சு.திருநாவுக்கரசர் (காங்கிரஸ்): பாஜக அரசு மத்தியில் பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்திக் கொண்டே வருகிறது. சுமார் ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு பொதுமக்கள் மீது விலை உயர்வு திணிக்கப்பட்டுள்ளது. 
உலகின் எந்த நாட்டிலும் பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் உள்ள அளவுக்கு ரூ.82க்கு அதிகமாகவும், டீசல் விலை ரூ.75-க்கும் அதிகமாகவும் விற்கப்படவில்லை. ரூ.35 -இலிருந்து ரூ.40க்குள் விற்கப்படவேண்டிய பெட்ரோல் மற்றும் டீசல் விலை இரண்டு மடங்கு அதிகமாக உயர்த்தி, நினைக்கும் பொழுதெல்லாம் எண்ணெய் நிறுவனங்கள் விலையை ஏற்றிக்கொண்டே வருகின்றன. 
இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் உயர்கின்றன. 
சர்வதேச கச்சா எண்ணெய் நிலவரங்களைக் காரணம் காட்டும் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் விலை குறையும்போது, அதற்கேற்ப பெட்ரோல் விலையைக் குறைப்பதில்லை. தற்போதைய சூழலில் தமிழக அரசு மதிப்புக்கூட்டு வரியிலும், மத்திய அரசு உற்பத்தி வரியிலும் பெருமளவில் குறைக்க முன்வரவேண்டும். 
டிடிவி தினகரன் (அமமுக) : பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்திருப்பது மக்கள் மீது விழுந்த பேரிடியாகும்.
இந்த கொடூர பொருளாதார தாக்குதலை வேடிக்கை பார்க்கும் மத்திய-மாநில அரசுகளுக்கு எனது கடும் கண்டனம். 
பெட்ரோல், டீசல் மீதான வரிகளை உடனடியாகக் குறைத்து மக்களை பெரும் அபாயத்தில் இருந்து பாதுகாக்க மக்கள் நலன் சார்ந்த கொள்கை முடிவை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.