மேட்டுப்பாளையத்தில் யானைகள் நலவாழ்வு முகாம் தொடக்கம்

மேட்டுப்பாளையத்தில் யானைகள் நலவாழ்வு முகாம் தொடக்கம்

மேட்டுப்பாளையத்தில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் வெள்ளிக்கிழமை துவங்கியது.

மேட்டுப்பாளையத்தில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் வெள்ளிக்கிழமை துவங்கியது.

தமிழகத்திலுள்ள கோயில்கள் மற்றும் திருமடங்களைச் சேர்ந்த யானைகளுக்குப் புத்துணர்வு அளிக்கும் வகையில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் யானைகள் நல வாழ்வு முகாம்  2003-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. 

நீலகிரி மாவட்டம், தெப்பக்காட்டில் 4 ஆண்டுகள் நடைபெற்ற இந்த முகாம் அதற்குப் பின்னர் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப் படுகையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 11-ஆவது யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம் மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோயில் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப் படுகையில் வெள்ளிக்கிழமை துவங்கியது. 

இதன் தொடக்க நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி,  இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்,  வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி. ஜெயராமன் ஆகியோர் பங்கேற்று முகாமை தொடங்கிவைத்தனர். 

முகாமில் பங்கேற்ற யானைகளுக்கு ஆப்பிள்,  தர்பூசணி,  வாழைப் பழம், கரும்பு, வெல்லம் ஆகியவற்றை வழங்கினர். 

துவக்க நிகழ்ச்சியில் இந்து அறநிலையத் துறை ஆணையர் டி.கே.ராமச்சந்திரன், தலைமையிடத்து இணை ஆணையர் ஹரிப் பிரியா, கோவை இணை ஆணையர் ராஜமாணிக்கம்,  சட்டம் சார்ந்த இணை ஆணையர் அசோக்,  பண்ணாரி உதவி இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் ராமு, முகாம் பொது மேற்பார்வையாளர் வெற்றிச்செல்வன், ஆய்வாளர்கள் சேகர், தமிழ்வாணன், காரமடை கோயில் செயல் அலுவலர் பெரியமருதுபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

6 ஏக்கர் நிலப் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த யானைகள் முகாமில், பாகன்கள் தங்குமிடம், ஓய்வு அறை,  தீவன மேடை,  சமையல் கூடம், பாகன்கள் மற்றும் யானைகளுக்கு மருத்துவப் பரிசோதனை நிலையம்,  யானைகள் நடைப் பயிற்சி மேற்கொள்வதற்காக 3.4 கி.மீ தொலைவுக்கு நடைபாதை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. யானைகளுக்கு ஷவர் குளியல் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

முகாமைச் சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க 6 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக கண்காணிப்புக் கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 

முகாமுக்குள் காட்டு யானைகள் புகுவதைத் தடுக்க ஒன்றரை கி.மீ தொலைவுக்கு சூரிய மின்வேலி, தொங்கு மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. முகாமைச் சுற்றிலும் 14 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜ் தலைமையில் டிஎஸ்பி மணி மேற்பார்வையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

முகாமில் பங்கேற்ற  அமைச்சர்கள்  எஸ்.பி.வேலுமணி,  திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன்,  சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி. ஜெயராமன்ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால்  கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் கடந்த 2003- ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 11-ஆவது  முகாம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.  இந்த முகாமில் 22 கோயில் யானைகள், 4 திருமடத்தின் யானைகள், புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 2 யானைகள் என  மொத்தம் 28 யானைகள் பங்கேற்கின்றன. யானைகள் பாதுகாப்பாக இருக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. யானைகள் முகாம் நடத்துவதற்கு 23 கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் தகவல் எங்களுக்கு இதுவரை தெரியாது. வனத் துறை கட்டுப்பாட்டில் முதுமலை,  சேலம்,  வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் 52 யானைகள் உள்ளன. இங்குள்ள யானைகளுக்கும் விரைவில் புத்துணர்வு முகாம் நடத்தப்படும் என்றனர்.  

சுழற்சி முறையில் பாதுகாப்பு: யானைகள் நல வாழ்வு முகாம் பாதுகாப்பு ஏற்பாடுகள்குறித்து மேட்டுப்பாளையம் வனச் சரகர் செல்வராஜ் கூறியதாவது: 
முகாமில் டின் ஷீட், சோலார், தொங்கு கம்பி, சீரியல் பல்புகள், வெளிச்சம் எதிரொலிக்கும் பட்டைகள்,  பிளேம் லைட்டுகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.  

8 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  4 ரோந்து வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.  3 வனத் துறை பணியாளர்கள், 70 தற்காலிகப் பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

நெல்லிமலை, கண்டியூர், தேக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது 11 யானைகள் ஒரு குழுவாகவும், 12 யானைகள் இன்னொரு குழுவாகவும் நடமாடி வருகின்றன. இந்த யானைகள் விவசாய நிலங்கள், குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையாமல் இருக்க வனத் துறையினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாற்ற உள்ளனர் என்றார்.

யானைகள் நலவாழ்வு முகாமை தொடங்கிவைத்து யானைகளுக்கு பழங்களை ஊட்டும்  அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, சேவூர் எஸ்.ராமசந்திரன் ஆகியோர். உடன்,  சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், ஆட்சியர் த.ந.ஹரிஹரன், எம்எல்ஏக்கள் அம்மன் கே.அர்ச்சுணன்,  ஓ.கே.சின்னராஜ், கஸ்தூரி வாசு உள்ளிட்டோர். 

முகாமில் யானைகளுக்கு வழங்கப்படும் உணவுகள்

கூந்தல் பனை, தென்னைமட்டை,  புல் (கோ1,  கோ2,  கோ3),  கரும்பு சோகை, சாறுள்ள கரும்பு,  பலா இலை,  சோளத்தட்டு,  ரீட்ஸ்,  அத்தி,  ஆல்,  அரசு, மூங்கில், கீரை வகைகள் போன்றவை வழங்கப்படும். 

தானிய வகைகள்:   அரிசி, பச்சைப் பயறு,  கொள்ளு மருந்து,  ஊட்டச்சத்து உணவுகள்:  அஷ்டசூரணம், சியாவணபிராஷ்,  பயோ பூஸ்ட் மாத்திரை, புரோட்டின் சப்ளிமென்ட்,  மல்டி வைட்டமின் மாத்திரைகள்,  மினரல் மிக்ஸர். சிறப்பு உணவு வகைகளாக பேரிச்சை, அவுல்,  கேரட்,  பீட்ரூட் போன்றவை வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com