ஜூலை 4, 5 இல் நடைபெறும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் பிற மாநிலங்களைப் போல் தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைக்க வேண்டும் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டமைப்பின் மாநிலக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாட்டில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் மற்ற மாநிலங்களைப் போன்று தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைத்து நிர்ணயிக்க வேண்டும், ஆசிரியர்களின் பணிக்காலம் மற்றும் உயர்கல்வித் தகுதி ஆகியவற்றுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் (எஸ்டிஎப்ஐ) தமிழ்நாடு மாநிலக்குழு தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) மதுரையில் உள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தமிழ்நாடு மாநில அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் அ.சங்கர் தலைமை வகித்தார். தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனத் தலைவரும், எஸ்டிஎப்ஐ அகில இந்தியச் செயலாளருமான அ.மாயவன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொருளாளர் ச.கார்த்திகேயன் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் த.உதயசூரியன் நன்றி கூறினார்.
இக்கூட்டத்துக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் மூ.மணிமேகலை, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் மா.குமரேசன், தமிழ்நாடு அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் அ. அமலராஜன், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் க. சு. பிரகாசம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டப் பொருள்களின் மீதான விவாதத்தைத் தொடக்கி வைத்து எஸ்டிஎப்ஐ தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளரும், அகில இந்திய துணைத் தலைவருமான ச.மயில் உரையாற்றினார்.
பின்னர், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களின் பேராதரவுடன் பெரு வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு முதல்வர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு எஸ்டிஎப்ஐ மாநிலக்குழு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.
2. தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள காலை உணவுத் திட்டத்தை பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தி உத்தரவிட்ட தமிழ்நாடு அரசுக்கு எஸ்டிஎப்ஐ மாநிலக்குழு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
3. 1.9.2025-ல் வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் மற்ற மாநிலங்களைப் போன்று தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைத்து நிர்ணயிக்க வேண்டும் எனவும், ஆசிரியர்களின் பணிக்காலம், உயர்கல்வித்தகுதி ஆகியவற்றுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் எனவும் எஸ்டிஎப்ஐ மாநிலக்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. புதிதாகப் பொறுப்பேற்ற மேற்கு வங்க அரசு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்களை 55 ஆக குறைத்துள்ளதையும், ஆசிரியர்களின் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, ஆசிரியர் பயிற்சி மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றுக்கு மதிப்பெண்கள் வழங்கி 26.5.2026 இல் அரசிதழில் வெளியிட்டுள்ளதையும் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு எஸ்டிஎப்ஐ மாநிலக்குழு கொண்டு வருகிறது.
4. நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்குதல், தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ ரத்து செய்தல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்டிஎப்ஐ அகில இந்தியச்செயற்குழு முடிவின்படி, எஸ்டிஎப்ஐ தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் திருச்சியில் 19.7.2026 இல் மாநில அளவிலான கருத்தரங்கம் ஒன்றை நடத்துவது என எஸ்டிஎப்ஐ மாநிலக்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.
மேலும் தொடக்கக்கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த ஆசிரியர்களின் கோரிக்கைகள் சார்ந்தும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Summary
Teachers Qualifying exam pass marks must be Reduc! Teachers' federation urges!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான முன்னேற்பாடுகள்: ஆட்சியா் ஆலோசனை

அகா்பத்தி தொழில்துறை வளா்ச்சிக்காக தமிழக ஆளுநரிடம் சங்கம் கோரிக்கை மனு
சிறப்பு ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு வழங்க பட்டதாரி ஆசிரியா்கள் கோரிக்கை







