தமிழகத்தில் தேர்தல் நடத்த இயலாத சூழல் உள்ள தொகுதிகள் எவை?: அறிக்கை கோரும் இந்திய தேர்தல் ஆணையம்? 

தமிழகத்தில் தேர்தல் நடத்த இயலாத சூழல் உள்ள தொகுதிகள் எவை எவை என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தேர்தல் நடத்த இயலாத சூழல் உள்ள தொகுதிகள் எவை?: அறிக்கை கோரும் இந்திய தேர்தல் ஆணையம்? 
Published on
Updated on
1 min read

புது தில்லி: தமிழகத்தில் தேர்தல் நடத்த இயலாத சூழல் உள்ள தொகுதிகள் எவை எவை என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் 38 தொகுதிகளுக்கு நாளை ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பெருமளவு பணம் குவிக்கப்பட்டுள்ளது என்று கிடைத்த தகவலின் காரணமாக சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் கோடிக்கணக்கில் பணம் சிக்கியது.

குறிப்பாக திமுக பொருளாளர் துரைமுருகனின் ஆதரவாளர்களின் இடங்களில் நடந்த சோதனையில் ரூ. 11 கோடிக்கு மேல் பணம் சிக்கியது. இதனையடுத்து அத்தொகுதியில் தேர்தல்  ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் அதிக அளவில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தின் காரணமாக வேலூர் தொகுதி நாடாளுமன்றத் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் செவ்வாய் இரவு அறிவித்தது.

அதையடுத்து செவ்வாய் இரவே தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

அதேபோல் தேனியில் அமமுக தேர்தல் அலுவலகத்தில் செவ்வாய் இரவு துவங்கி தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் சுமார் ரூ.1.48 லட்சம் கோடி கைப்பற்றபட்ட தகவல் வெளியானது.

அதேபோல் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சுப்ரமணியனுக்கு சொந்தமான அலுவலகம் மற்றும் தோட்டத்தில் புதனன்று நடைபெற்ற சோதனையில் ரூ.43 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் தேர்தல் நடத்த இயலாத சூழல் உள்ள தொகுதிகள் எவை எவை என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்திற்கு பரவலாக  இலவச தொலைபேசி எண்ணிற்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. அதேபோல் சமூக வலைத்தளங்களிலும் பணப்பட்டுவாடா விடியோக்கள் வெளியாகின.  

தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்துவதே ஆணையத்தின் நோக்கம் என்றும், அதற்கு வாய்ப்பு இல்லாத சூழல் தமிழகத்தில் நிலவுகிறதா என்பதைக் கண்டறியவே , இவ்வாறு அறிக்கை கோரப்பட்டு உள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அறிக்கையின் அடிப்படையில் ஏதேனும் நடவடிக்கைகள் இருக்குமா என்பது ஆவலாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com