ஜனநாயகப் பாதையிலிருந்து விலகிச் செல்லத் துடிக்கும் மோடி அரசு: ஸ்டாலின்  

அரசியல் சட்டம் வகுத்துக் கொடுத்த ஜனநாயகப் பாதையிலிருந்து விலகிச் செல்ல பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு துடிக்கிறது என்று காஷ்மீர் விவகாரம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
ஜனநாயகப் பாதையிலிருந்து விலகிச் செல்லத் துடிக்கும் மோடி அரசு: ஸ்டாலின்  
Published on
Updated on
1 min read

சென்னை: அரசியல் சட்டம் வகுத்துக் கொடுத்த ஜனநாயகப் பாதையிலிருந்து விலகிச் செல்ல பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு துடிக்கிறது என்று காஷ்மீர் விவகாரம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக திங்களன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

காஷ்மீருக்கு, அறிஞர்களின் ஆழ்ந்த ஆலோசனைக்குப் பின்னர் இந்திய அரசமைப்புச் சட்ட ரீதியாக வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களின் அறிவிப்பு மூலம் ரத்து செய்திருப்பதும், “லடாக்” மற்றும் “ஜம்மு காஷ்மீர்” என்ற பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றியமைத்திருப்பதும் கண்டு, இந்தியத் திருநாடு எங்கே போய்க் கொண்டிருக்கின்றது என்ற மனக் கவலையும், அதிர்ச்சியும் உண்டாகிறது. நாட்டின் பாதுகாப்பிலும், இந்திய நாட்டின் இறையான்மையிலும் திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் அசைக்க முடியாத அக்கறையும் நம்பிக்கையும் வைத்திருக்கிறது.

காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படக் கூடாது என்பதிலும் உறுதியாக இருந்து வந்துள்ளது. மத்திய பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற ஒரு சில மாதங்களுக்குள் காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்திருப்பது- அதுவும் அம்மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாத நிலையில் இந்த முடிவை எடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அடிப்படைப் பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியாகவே இந்த முடிவு பார்க்கப் படுகிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரையும், மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநரையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கவும் முடியாது. மக்களின் உணர்வுகளை ஒரு முதலமைச்சர் போல் மாநில ஆளுநர் நுட்பமாக உணர்ந்து கொண்டு விட்டார் என்றும் கூறிட முடியாது. ஆகவே மத்திய பா.ஜ.க. அரசின் இந்த முடிவு நாட்டின் பாதுகாப்பு என்ற முக்கிய காரணத்தை முன் வைத்து எடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி நாட்டுப் பற்று கொண்ட அனைவருடைய மனதிலும் இயற்கையாக எழுகிறது. 

மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்ற குரல் பா.ஜ.க. ஆட்சியில் நாடு முழுவதும் வலிமையாக எதிரொலிக்கின்ற   இந்த நேரத்தில்,  இருக்கின்ற மாநிலத்தையும் பிரித்து யூனியன் பிரதேசமாக அறிவிப்பது இந்திய அரசியல் சட்டம் வகுத்துக் கொடுத்த ஜனநாயகப் பாதையிலிருந்து விலகிச் செல்ல பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு துடிக்கிறது என்பதைக் காட்டுகிறது.

ஆகவே இந்திய ஜனநாயகத்தைக் கைவிடும் எவ்வித நடவடிக்கைகளையும் இப்படி அவசர கதியில் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு எடுப்பதை மாற்றிக் கொள்ள  வேண்டும் என்றும், ஜம்மு காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு அமையும் வரை குடியரசுத் தலைவர் அவர்களின் இந்த அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com