சேலம் தலைவாசல் கூட்டு ரோடு அருகில் 900 ஏக்கரில் அமையும் ஒருங்கிணைந்த நவீன கால்நடை பூங்காவில் நாட்டின, கலப்பின காளைகளைக் கொண்டு ரூ. 100 கோடியில் உறை விந்து உற்பத்தி மையம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
சேலம் நேரு கலையரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ. 202 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தல், ரூ. 64 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளைத் துவக்கி வைத்தல், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 157 கோடி கடனுதவி வழங்கும் விழாவில் கலந்து கொண்டு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பேசியது:
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ. 140.31 கோடி மதிப்பில் அல்லிக்குட்டை, நேரு நகர், காந்தி நகர், பெரியார் நகர் மற்றும் அவ்வை நகர் பகுதிகளில் 1,476 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும் பணி, சேலம் மாநகராட்சி சார்பில் தொங்கு பூங்கா வளாகத்தில் ரூ. 10.50 கோடி மதிப்பில் பல்நோக்கு மண்டபத்தை மேம்படுத்தும் பணிகள் உள்பட ரூ. 202.47 கோடி மதிப்பில் 34 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 2017-18-ஆம் ஆண்டில் வங்கிக் கடன் இணைப்பு இலக்கு ரூ. 7,000 கோடி நிர்ணயம் செய்யப்பட்டது. இதுவரை 2,72,089 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 8,332 கோடி வழங்கப்பட்டுள்ளது.
பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகள் மூலமாக கடந்த 2011-12-ஆம் ஆண்டு முதல் 2017-18-ஆம் ஆண்டு வரை ரூ. 41,180 கோடி சுய உதவிக் குழுக்களுக்குக் கடனாக வழங்கப்பட்டுள்ளது.
சுய உதவிக் குழு வங்கிக் கடன் இணைப்புத் திட்டத்தில் அகில இந்திய அளவில் தமிழகம் ஒரு சிறந்த மாநிலமாகத் திகழ்கிறது. மேலும், சேலம் மாவட்டத்தில் உள்ள சுமார் 2750 குழுக்களுக்கு கிட்டத்தட்ட 42,600 உறுப்பினர்கள் கொண்ட சுய உதவிக் குழுக்களுக்கு சுமார் ரூ. 157 கோடி கடனுதவி வழங்கப்பட்டிருக்கிறது.
தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் சேலம் தலைவாசல் கூட்டு ரோடு அருகில் 900 ஏக்கர் பரப்பளவில் ரூ. 396 கோடியில் ஆசியாவிலேயே பெரிய ஒருங்கிணைந்த பல்துறை பல்நோக்குடன் கூடிய நவீன கால்நடை பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும், மரபு திறன்மிக்க நாட்டின மற்றும் கலப்பின காளைகளைக் கொண்டு ரூ. 100 கோடி மதிப்பில் உறை விந்து உற்பத்தி மையம் அந்த வளாகத்திலே அமைக்கப்படும்.விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளினால் அல்லல்படும் நிலையில் சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் விதமாக ஆண்டொன்றுக்கு ரூ. 6,000 வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். முதற்கட்டமாக ரூ. 2,000 வங்கிக் கணக்கிலே செலுத்தும் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் மட்டும் சுமார் 60 லட்சம் சிறு, குறு விவசாயிகள் பயன்பெற உள்ளனர்.
இத் திட்டத்தில் தொடர்ந்து ஐந்தாண்டில் ஒவ்வோர் ஆண்டும் ரூ.6,000 என வங்கி கணக்கில் செலுத்தப்படும். சிறு, குறு விவசாயிகள் சார்பாகவும், தமிழக மக்களின் சார்பாகவும், விவசாயிகள் சார்பாகவும், மனமார நன்றியை பிரதமர் மோடிக்கு தெரிவித்து கொள்கிறேன். இதுதவிர, தமிழக அரசு அனைத்து ஏழை தொழிலாளிகளுக்கும் சிறப்பு உதவி திட்டத்தின் கீழ் ரூ. 2,000 வழங்கப்படும் என அறிவித்தேன். இதனிடையே, நிறைய பேர், அந்த சிறப்பு உதவி திட்டத்தின் எங்கள் பெயர் இடம்பெறவில்லை என்று கோரிக்கை மனு அளித்தனர்.
வேண்டுமென்றே சிலர், பாதி பேருக்குத்தான் கிடைக்கும், பாதி பேருக்கு கிடைக்காது என்று புரளியை கிளப்பிக் கொண்டிருக்கின்றனர். தகுதியான ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் விடுபடாமல் கணக்கெடுத்து ரூ. 2,000 வழங்கப்படும். பொங்கல் தொகுப்புத் திட்டமாக, ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ரூ. 1,000 வழங்கப்பட்டது. இந்த அரசு ஏழை மக்களுக்காக உருவாக்கப்பட்ட அரசாகும்.
எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் ஒவ்வோர் ஊராட்சிக்கும் சென்று, அங்கிருக்கும் மக்களிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறார்.
சுய உதவிக் குழுக்களில் உள்ள பெண்கள் உற்பத்தி செய்கின்ற பொருட்கள் விற்கப்பட்டு, பொருளாதாரம் ஈட்டக்கூடிய நிலையை உருவாக்கி உள்ளோம். எனவே நீங்கள் (மு.க.ஸ்டாலின்) எந்த ஊருக்குச் சென்றாலும் அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை.
மத்திய அரசின் மூலமாக, மாநில சாலை, மாவட்டச் சாலை போன்றவற்றை தரம் உயர்த்த வேண்டும் என்பதற்காக 41 சாலைகளைத் தேர்வு செய்து, மைய அரசுக்கு அதைக் கொடுத்து, சுமார் ரூ. 50 ஆயிரம் கோடி தமிழகத்துக்கு சாலை மேம்பாட்டுத் திட்டத்துக்கு மத்திய அரசு வழங்கி இருக்கிறது.
அரசின் பல்வேறு திட்டங்கள் வாயிலாக போக்குவரத்துத் துறை, மின்சாரத் துறை, வேளாண்மைத் துறை என்று 16 விருதுகளை பெற்றிருக்கிறோம். உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி ரூ. 3,00,431 கோடி தொழில் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. ஒரு தொழில்வளம் மிக்க மாநிலமாக தமிழகத்தை உருவாக்க இருக்கிறோம் என்றார்.
விழாவில், ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், எம்.பி.க்கள் வி. பன்னீர்செல்வம், பி.ஆர்.சுந்தரம், கே.காமராஜ், எம்எல்ஏ-க்கள் செ.செம்மலை, ஜி.வெங்கடாஜலம், ஏ.பி.சக்திவேல், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, மகளிர் திட்டத்தின் கூடுதல் இயக்குநர் கணேஷ்கண்ணா, முன்னாள் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.இளங்கோவன், கூட்டுறவு சங்கங்களின் மாநிலப் பதிவாளர் ஆர்.பழனிசாமி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநர் ஆர். சுப்ரமணியகுமார், இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் எம்.கே. பட்டாச்சாரியா, மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் (பொ) எஸ்.பி. கார்த்திகா உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாய் அபயங்கர், ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணுவுக்கு கார் பரிசளித்த சூர்யா!

”எடப்பாடியார் பதில் சொல்லியே ஆகணும்!” பிரேமலதா விஜயகாந்த் | ADMM
திருச்செங்கோட்டில் தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி: முதல்வர் இரங்கல், நிதியுதவி அறிவிப்பு

ஐபிஎல் இறுதிப் போட்டி: திருவிழாவாக மாறிய குஜராத்!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



