தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருகே மின் திருட்டில் ஈடுபட்ட தனியார் ஐஸ் ஆலைக்கு மின்வாரியம் ரூ. 1 கோடி அபராதம் விதித்துள்ளது.
குலசேகரன்பட்டினம்-திருச்செந்தூர் சாலையில் கல்லாமொழி அருகே ஐஸ் ஆலை உள்ளது.
தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு மீனவர் சங்கத் தலைவர் கயஸ் மகன் ஜெயப்பிரகாஷ் இந்த ஆலையை நடத்தி வருகிறார்.
இந்த ஆலைக்கு தமிழ்நாடு மின்வாரியத்தில் இருந்து 2 மின் இணைப்புகள் பெற்றுள்ளார். இந்த இணைப்புகளுக்கு மின் கட்டணம் மிகக் குறைவாக வருவதாக மின்வாரிய அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மதுரை கோட்ட மின்வாரிய அமலாக்கத் துறை செயற்பொறியாளர் சின்னச்சாமி தலைமையில், விருதுநகர் அமலாக்கத் துறை உதவிச் செயற்பொறியாளர் உதுமான் அலி, திருச்செந்தூர் மின்வாரிய உதவிச் செயற்பொறியாளர் பிரபாகரன் உள்ளிட்ட 15 அதிகாரிகள், 2 குழுவாக ஆலையில் சோதனை நடத்தினர்.
திங்கள்கிழமை அதிகாலை 1 மணி முதல் 4 மணி வரை சோதனை நடைபெற்றது. இதில், இந்த ஆலைக்கு மின்கம்பத்தில் இருந்து வரும் 2 மின் இணைப்புகள் மின் மீட்டருக்கு செல்லாமல், ப்யூஸ் கேரியர் நீக்கப்பட்டு, ஆலைக்கு நேரடியாகச் சென்றது தெரியவந்துள்ளது.
இதனால், மின்சாரம் பயன்படுத்துவது அளவீட்டு இயந்திரத்தில் பதிவாகாமல் குறைந்த அளவே மின்கட்டணம் வந்ததும், இதன்மூலம் அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, ஐஸ் ஆலைக்கு ரூ. 95,15,923 அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்தவில்லையென்றால் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொழிற்சாலை உரிமையாளருக்கு கத்திக் குத்து: ஹரித்வாரில் இரண்டு சிறுவா்கள் கைது

இன்றைய மின்தடை: குறிச்சி






