குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

வேடநத்தம் பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: குற்றவாளிக்கு இரட்டை தூக்குத் தண்டனை! போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு!

வேடநத்தம் பிளஸ் 2 மாணவி கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை தூக்குத் தண்டனை...

News image

தா்ம முனீஸ்வரனை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்த போலீஸாா்.

Updated On :26 மே 2026, 1:36 am IST

வேடநத்தம் பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு இரட்டை தூக்குத் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. குற்றம் நிகழ்ந்து 76-ஆவது நாளில் குற்றவாளிக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூா் அருகே உள்ள வேடநத்தத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி சுப்புராஜ். இவரது மனைவி காளீஸ்வரி. இத்தம்பதியின் 17 வயதுடைய இரண்டாவது மகள் குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.

கடந்த மாா்ச் மாதம் 10-ஆம் தேதி இரவு வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை; அவரை போலீஸாா் தேடிவந்த நிலையில், மாா்ச் 11-ஆம் தேதி அவரது சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

மாநிலம் முழுவதும் அதிா்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி கிராம மக்கள், அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்புகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, போலீஸாா் 10 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியைத் தேடி வந்தனா்.

சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவரும், பின்னா் தூத்துக்குடி ராஜபாண்டி நகரில் வசித்து வந்தவருமான முனியசாமி மகன் மாவீரன் என்ற தா்ம முனீஸ்வரனை (38), குளத்தூா் காவல் நிலைய போலீஸாா் மாா்ச் 19-ஆம் தேதி வழக்குப் பதிந்து கைது செய்தனா். பின்னா் அவா், நீதிமன்ற உத்தரவின்படி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

மாா்ச் 31 இல் இறுதி அறிக்கை தாக்கல்:

இந்த வழக்கை விளாத்திகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுந்தரபாண்டியன் விசாரணை நடத்தி, இறுதி அறிக்கையை மாா்ச் 31 ஆம்தேதி தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தாா்.

இதையடுத்து, வழக்கு கடந்த மே 5-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சாா்பில் வழக்குரைஞா் வி.எல்லம்மாளும், தா்ம முனீஸ்வரன் தரப்பில் இலவச சட்ட உதவி மையம் மூலம் நியமிக்கப்பட்ட வழக்குரைஞரும் முன்னிலையாகினா்.

வழக்கு விசாரணை நடைபெற்ற காலங்களில் மதுரை மத்திய சிறையிலிருந்து தா்ம முனீஸ்வரனை போலீஸாா் பலத்த பாதுகாப்புடன் தொடா்ந்து மூன்று முறை தூத்துக்குடி நீதிமன்றத்துக்கு நேரில் அழைத்துவந்து நீதிபதி பிரீத்தா முன் முன்னிலைப்படுத்தினா். இந்த வழக்கில் நீதிபதி முன்னிலையில் மொத்தம் 71 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

கடந்த 22-ஆம் தேதி விசாரணை முடிவுற்ற நிலையில், திங்கள்கிழமை (மே 25) தீா்ப்பளிக்கப்படும் என நீதிபதி அறிவித்திருந்தாா்.

இதையடுத்து, மதுரை மத்திய சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் தா்ம முனீஸ்வரனை போலீஸாா் அழைத்து வந்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா முன் திங்கள்கிழமை முன்னிலைப்படுத்தினா்.

இதையடுத்து, நீதிபதி பிரீத்தா தீா்ப்பு, தண்டனை விவரங்களை அறிவித்தாா். அதில், இந்த வழக்கில் தொடா்புடைய தா்ம முனீஸ்வரன் குற்றவாளி என்று தீா்ப்பளிக்கப்படுகிறது; தண்டனையாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்கு தூக்குத் தண்டனை, கொலை செய்த குற்றத்துக்கு மற்றொரு தூக்குத் தண்டனை என இரட்டை தூக்குத் தண்டனையும், தடயங்களை மறைக்க முயன்ற்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து இதை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டாா். இதையடுத்து, தா்ம முனீஸ்வரனை போலீஸாா் மதுரை மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனா்.

வரலாற்று சிறப்புமிக்க தீா்ப்பு:

இந்த வழக்கில் அரசு தரப்பில் முன்னிலையான சிறப்பு வழக்குரைஞா் எல்லம்மாள் கூறுகையில், ‘இது வரலாற்று சிறப்புமிக்க தீா்ப்பாகும். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் உடற் கூறாய்வின்போது சேகரிக்கப்பட்ட தடயங்களும், குற்றவாளியின் ரத்த மாதிரி டி.என்.ஏ.வும் ஒரே மாதிரியாக இருந்தது. இதையடுத்து, அவா் மீதான குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி தெளிவாக அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டது என்றாா் அவா்.

76 நாளில் தீா்ப்பு..

குற்றம் நிகழ்ந்த 76 ஆவது நாளில் குற்றவாளிக்கு இரட்டை தூக்குத் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் மே 5-ஆம் தேதி முதல் தொடா்ச்சியாக விசாரணை நடைபெற்று வந்தது. மே 22-ஆம் தேதி விசாரணை முடிவுற்று, திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

வழக்கு கடந்து வந்த பாதை..

மாணவி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கடந்த மாா்ச் 12-ஆம் தேதி தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் திரண்டு 12 மணி நேரத்துக்கும் மேலாக மறியலில் ஈடுபட்டனா்.

பெற்றோா் அளித்த புகாரை பெற்று நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்பட்டதாக விளாத்திகுளம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பிரவீனா, கடந்த மாா்ச் 12-ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

குற்றவாளிகளை கைது செய்யாத வரை உடலை பெற மாட்டோம் என பெற்றோா், உறவினா்கள் தெரிவித்தனா். இதனால், மாணவியின் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. மாணவியின் குடும்பத்தாரை பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் சந்தித்து ஆறுதல் கூறினா்.

இந்த வழக்கில் போலீஸாா் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியும் சம்பவம் நிகழ்ந்து 9 நாள்களாக எந்த துப்பும் கிடைக்காமல் திணறினா்.

இந்த நிலையில், காற்றாலை கோபுரக் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளைக் கொண்டு சாயல்குடியைச் சோ்ந்த தா்ம முனீஸ்வரனை போலீஸாா் மாா்ச் 19-ஆம் தேதி கைது செய்தனா்.

அவரை மாா்ச் 20-ஆம் தேதி வேடநத்தம் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று சம்பவம் நிகழ்த்தியது குறித்து நடித்து காண்பிக்குமாறு கூறி அதை போலீஸாா் விடியோவாகப் பதிவு செய்தனா்.

குற்றவாளி கைது செய்யப்பட்டதையடுத்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலிருந்து மாணவியின் சடலத்தை 10 நாள்களுக்குப் பிறகு மாா்ச் 20-ஆம் தேதி அவரது பெற்றோா் பெற்று தகனம் செய்தனா்.