அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகள் அதிகமாக இருந்தாலும், அவற்றில் மிக முக்கியமானவை புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப் படுத்த வேண்டும், ஊதிய விகிதங்களில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை தாமதமாக செயல்படுத்தப்பட்ட நிலையில், விடுபட்ட 21 மாதங்களுக்காக ஊதிய உயர்வு நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் ஆகியவை ஆகும். 21 மாத ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்குவது அரசின் கொள்கை முடிவு என்பதால், அது குறித்து அமைச்சரவையைக் கூட்டி முடிவெடுத்துக் கொள்ள முடியும். ஊதிய முரண்பாடுகளை களைவது குறித்து பரிந்துரைப்பதற்கான சித்திக் குழுவும், பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து பரிந்துரைக்க அமைக்கப்பட்ட ஸ்ரீதர் குழுவும் அறிக்கைகளை தாக்கல் செய்வதில் ஏற்பட்ட தாமதம் தான் இச்சிக்கலைத் தீர்க்க தடையாக இருந்தது.