/

பிரச்னைக்குரிய கோயில் இடத்தில் வணிக வளாகம்: அதிகாரிகள் திடீர் ஆய்வு

திருவண்ணாமலையில் பிரச்னைக்குரிய கோயில் இடத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது குறித்து அருணாசலேஸ்வரர் கோயில் அதிகாரிகள் திடீர்

Updated On :24 ஜனவரி 2019, 1:14 am IST


திருவண்ணாமலையில் பிரச்னைக்குரிய கோயில் இடத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது குறித்து அருணாசலேஸ்வரர் கோயில் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளன. இந்தச் சொத்துகள் அவ்வப்போது அரசியல்வாதிகள் துணையுடன் தனிநபர்களுக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை ஈசான்ய லிங்கம் அருகே அருணாசலேஸ்வரர் கோயில் நந்தவனம் இருந்தது. இந்த இடம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தனிநபர்களுக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளதாம். இதுகுறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பிரச்னைக்குரிய அந்த இடத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தனிநபர் ஒருவர் வணிக வளாகம் கட்டியுள்ளார். அண்மையில் தகவலறிந்த கோயில் இணை ஆணையர் இரா.ஞானசேகர் தலைமையிலான அதிகாரிகள் குறிப்பிட்ட இடத்துக்கு புதன்கிழமை சென்று ஆய்வு செய்தனர். அப்போது, ஏற்கெனவே கோயில் இடமாக இருந்து, பிறகு தனிநபர் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்ட பிரச்னைக்குரிய இடத்தில் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது தெரிய வந்தது. 
இந்த இடம் யாருக்குச் சொந்தம்? என்பது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, வணிக வளாகம் கட்டியது தவறு என்பது அதிகாரிகளுக்குத் தெரிய வந்தது. எனவே, அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது குறித்து அருணாசலேஸ்வரர் கோயில் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.