தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

பாரதியார் பாடலுடன் தொடங்கிய மாநாடு: பார்வையாளர்களைக் கவர்ந்த பறக்கும் குதிரை

ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம் என்ற பாடலுடன், உலக முதலீட்டாளர் மாநாடு தொடங்கியது. தமிழக அரசின் இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாடு புதன்கிழமை

News image

உலக முதலீட்டாளர் மாநாட்டு லட்சினையான பறக்கும் குதிரை மாநாட்டு மையத்துக்கு வந்த மெய்நிகர் காட்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

Updated On :24 ஜனவரி 2019, 2:11 pm IST


ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம் என்ற பாடலுடன், உலக முதலீட்டாளர் மாநாடு தொடங்கியது. தமிழக அரசின் இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாடு புதன்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் சென்னை வந்துள்ளனர்.
அவர்கள் தமிழகத்தின் பாரம்பரிய கலாசார, பண்பாட்டை அறியும் வகையில், சென்னையின் பல்வேறு முக்கிய சாலைப் பகுதிகளில் கரகாட்டம், தேவராட்டம் உள்ளிட்ட கிராமியக் கலைகள் புதன்கிழமை காலையில் நிகழ்த்தப்பட்டன. உலக முதலீட்டாளர் மாநாடு தமிழ்த்தாய் வாழ்த்துடன் புதன்கிழமை தொடங்கியது.
தமிழ்த்தாய் வாழ்த்தை 25 பள்ளிக் குழந்தைகள் ஒன்றாகப் பாட, பின்னணியில் மெல்லிசை ஒலிக்கப்பட்டது. இது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. மேடையில் மிக பிரம்மாண்ட டிஜிட்டல் திரை வைக்கப்பட்டிருந்தது. தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, கர்நாடக இசைப் பாடகி ஷோபனா விக்னேஷ், மகாகவி பாரதியார் தொழில்துறைக்கு முக்கியத்துவம் தந்து பாடிய ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம் என்ற பாடலைப் பாடினார்.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் கலாசாரத்தை எதிரொலிக்கும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
பறக்கும் குதிரை: தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை விளக்கும் வகையிலான விளக்கப் படம் மேடையில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட திரையின் வழியாக திரையிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, உலக முதலீட்டாளர் மாநாட்டின் இலச்சினையான பறக்கும் குதிரையானது தமிழகத்தின் தொழில் ஆலைகளின் வழியாகப் பயணித்து முதலீட்டாளர் மாநாடு நடைபெறும் வர்த்தக மையத்துக்கு வருவது போன்ற மெய்நிகர் காட்சி (Virtual Reality) நிகழ்த்தப்பட்டது. இது முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்ற பார்வையாளர்களைப் பெரிதும் ஈர்த்தது. இந்தக் குதிரை முதல்வர் பழனிசாமி முன்னிலையில் வந்து நின்று மலர்களைத் தூவி வரவேற்பது போன்ற காட்சி அமைப்பு செய்யப்பட்டிருந்தது.
ஃபோர்டு சர்வதேச ஆய்வு மையம்: கலை-கலாசார நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, முதலீட்டாளர் மாநாடு தொடக்க நிகழ்ச்சி நடந்தது. தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்றார். இதைத் தொடர்ந்து, தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மாநாட்டு விளக்க உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின் போது, சென்னை சோழிங்கநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள ஃபோர்டு நிறுவனத்தின் சர்வதேச ஆராய்ச்சி மையத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார். மேலும், விழா நடைபெறும் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள காட்சி அரங்குகளையும் அவர் திறந்து வைத்தார்.
வானூர்தி மற்றும் ராணுவ தளவாட உற்பத்திக்கான தனி கொள்கையை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுப் பேசினார். முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். தொடக்க விழாவின் இறுதியாக, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன் நன்றி தெரிவித்தார்.
விழா மேடையில் தொழிலதிபர்கள்: தொடக்க விழா மேடையில், முதல்வர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் சம்பத், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோருடன் மாநாட்டு பங்குதாரர்களாக உள்ள ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கொரியா, சிங்கப்பூர், பிரிட்டன் நாட்டுத் தூதர்களும், டி.வி.எஸ்., அதானி உள்பட 15-க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலதிபர்களும் அமர்ந்திருந்தனர்.
இன்று நிறைவு விழா: உலக முதலீட்டாளர் மாநாட்டின் நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெறுகிறது. அப்போது, பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு ஏற்கெனவே செய்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.