ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

மேக்கேதாட்டு: கட்சிப் பாகுபாடின்றி அனைவரும் சேர்ந்து தடுக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்டுவதை கட்சிப் பாகுபாடின்றி அனைவரும் ஒன்றுசேர்ந்து தடுத்து நிறுத்த வேண்டும் என்றார் திமுக தலைவர்

News image

திருச்சியில் புதன்கிழமை தனியார் ஹோட்டலில் சந்தித்துப் பேசும் திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலர் வைகோ.

Updated On :24 ஜனவரி 2019, 1:37 am IST


காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்டுவதை கட்சிப் பாகுபாடின்றி அனைவரும் ஒன்றுசேர்ந்து தடுத்து நிறுத்த வேண்டும் என்றார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். 
திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் பா.பரணிக்குமார் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட அவர் மணமக்களை வாழ்த்திய பின்னர் மேலும் பேசியது: மேக்கேதாட்டு அணை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த 55 உறுப்பினர்கள், பிரதமரைச் சந்தித்து மனு அளித்தோம். மத்திய அரசின் அனுமதியின்றி கர்நாடகம் மேக்கேதாட்டுவில் அணை கட்ட முடியாது. 
இந்தப் பிரச்னைக்கு தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களையும் கலந்து பேசி தீர்வு காண்போம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் கூறியிருக்கும் நிலையில், கர்நாடக அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பான ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்திருக்கிறது. மத்திய அரசும் அதை மகிழ்ச்சியாகப் பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட செய்திகள் தெரிந்தும் தமிழக முதல்வர் எடப்பாடி.கே.பழனிசாமி இதுவரை அதைக் கண்டித்து எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. 
தமிழகத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படாத முதல்வருக்கு வரும் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டும் வகையில் ஒவ்வொருவரும் தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். மேக்கேதாட்டு அணை கட்டும் பிரச்னையில் கட்சிப் பாகுபாடின்றி அனைவரும் ஒன்று சேர்ந்து கர்நாடக அரசின் அணை கட்டும்முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார். 

வைகோவுடன் திடீர் சந்திப்பு
 பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திருச்சி தனியார் ஹோட்டலில் தங்கியுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலர் வைகோ ஆகிய இருவரும் புதன்கிழமை காலை சந்தித்து பரஸ்பரம் உரையாடினர்.
திமுக-வினர் திருமண விழா, கரூர் மாவட்டத்தில் நடைபெறும் திமுக ஊராட்சி சபை கூட்டம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநாடு ஆகியவற்றில் பங்கேற்பதற்காக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திருச்சி தனியார் ஹோட்டலில் தங்கியுள்ளார். 
இதேபோல, வி.சி. கட்சியின் மாநாடு மற்றும் திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளுக்காக மதிமுக பொதுச் செயலர் வைகோவும் மேற்குறிப்பிட்ட ஹோட்டலில் தங்கியுள்ளார். நிகழ்ச்சிநிரல் காரணமாக இரண்டு கட்சிகளின் தலைவர்களும் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தும் சந்திக்க இயலவில்லை. 
இந்நிலையில், புதன்கிழமை காலை வைகோவும், ஸ்டாலினும் மரியாதை நிமித்தமாக சந்தித்துக் கொண்டதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக, முன்னாள் அமைச்சரும் திமுக மாவட்ட செயலருமான கே.என். நேரு, வைகோவை அழைத்து வந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.