இவர்களை மட்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவேக் கூடாது: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி

நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கூடாது என, தலைமை தேர்தல் அதிகாரி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இவர்களை மட்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவேக் கூடாது: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி


மதுரை:  நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கூடாது என, தலைமை தேர்தல் அதிகாரி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்:

தமிழகத்தில் நீர்நிலைகள் நாளுக்கு நாள் ஆக்கிரமிக்கப்பட்டு, வீடுகள், வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதனால், மழைநீர் சேகரிக்க முடியாமல் நிலத்தடி நீர் படுபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. எனவே, நீர்நிலைகளில் உள்ள கட்டடங்களுக்கு பத்திரப்பதிவு செய்யக்கூடாது, மின் இணைப்பு வழங்கக்கூடாது, உள்ளாட்சி அனுமதியுடன் வரைபட அனுமதி அளிக்கக்கூடாது, ஆக்கிரமிப்பு கட்டடங்களுக்கு வரி வசூலிக்கக்கூடாது, ஆக்கிரமிப்பு கட்டட உரிமையாளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கக்கூடாது, அரசின் நலத் திட்ட உதவிகளையும் வழங்கக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் கே.கே. சசிதரன், பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் அளித்த உத்தரவு:

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து கடந்த 2017-இல் சிஏஜி அளித்த வழிகாட்டுதலின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, தமிழக அரசின் தலைமைச் செயலர் பிப்ரவரி  11ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் நீர்நிலைகளின் மூல வரைபடங்களின் நகல்களை சார்}பதிவாளர் அலுவலகங்களுக்கும், மின் வாரியத்துக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும், மாவட்டத் தேர்தல் அதிகாரிக்கும் பிப்ரவரி  8}ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

இது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பிப்ரவரி 11ஆம் தேதி நீதிமன்றத்தில் பதில் மனுவாக தாக்கல் செய்யவேண்டும். தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர்கள், வருவாய்த் துறை அதிகாரிகள் ஆகியோரிடம், தலைமைச் செயலர் நீர் நிலைகளான குளங்கள், கண்மாய்களின் ஆவணங்களைப் பெற்று, அது குறித்த பதில் மனுவை பிப்ரவரி 11ஆம் தேதி தாக்கல் செய்யவேண்டும். 

நீர்நிலைகள் தொடர்பாக வருவாய்த் துறை வசம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில், நீர்நிலைகளில் எந்த பத்திரமும் பதிவு செய்யக்கூடாது என்று, தமிழக பதிவுத் துறை தலைவர் சார்பில், அனைத்து சார்-பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள எந்தவிதமான கட்டடங்களுக்கும் மின் இணைப்பு வழங்கக்கூடாது என்பதை மின்வாரிய அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும். நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டடங்களுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கக்கூடாது என்பதை, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நகராட்சி நிர்வாகத் துறை முதன்மைச் செயலர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். 

ஆக்கிரமிப்பு கட்டடங்களுக்கு சொத்து வரி உள்ளிட்ட எந்த வரியும் வசூலிக்கக்கூடாது. நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com