இடங்கள் அதிகரிக்கும் என்று ஏமாற்றி சமூக நீதியையே முதலில் நீர்த்துப் போகச்செய்து, அடுத்தகட்டமாக என்ன செய்யப்போகின்றார்கள் என்றால், அதை சாகடிக்கும் சூழ்ச்சியில் மத்திய அரசு இப்பொழுது கடைபிடிக்கின்றது. இது எதைக்காட்டுகின்றது, என்று பார்த்தீர்கள் என்றால் Slow Poison என்பதுமாதிரி, கொடிய விசம் கொண்ட பாம்பை நல்ல பாம்பு என்று அழைப்பதற்கு ஒப்பானதாக இது அமைந்துவிடும். அந்த மயக்கத்திலும், கவச்சியிலும் மாநில அரசு மனம் பறிகொடுத்துவிடக்கூடாது என்பதுதான் என்னுடைய கோரிக்கை. அதுமட்டுமல்ல “சமூக நீதி காத்த வீராங்கனை” என்ற பட்டத்தை, முன்னாள் முதல்வர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் என்று நாம் சொல்லியிருக்கின்றோம். அதனை நீங்களும் பெருமையோடு பேசிக்கொண்டிருக்கின்றீர்கள். அந்த அடிச்சுவட்டில் தான் இப்பொழுது ஆட்சி நடந்துகொண்டிருக்கின்றது என்று சொல்கின்றீர்கள். அதனால், நான் கேட்க விரும்புவது 25 சதவிகித கவர்ச்சி வலையில் நாம் விழுந்துவிடக்கூடாது. ஆகவே, முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு குறித்து, இந்த அரசின் நிலைப்பாடு என்ன? உங்களுடைய கொள்கை என்ன? என்பதை மேலும் தாமதம் செய்துகொண்டிருக்காமல் ஒரு ஆபத்தான கட்டத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கின்றோம். எனவே, இப்பொழுதாவது, இந்த நேரத்திலாவது இந்த அரசு என்ன நிலையில் இருக்கின்றது என்பதை நீங்கள் அறிவிக்க வேண்டும். “சமூக நீதியினுடைய” தொட்டில் நம்முடைய தமிழ்நாடு. ஏற்கனவே, கடைபிடித்துக் கொண்டிருக்கின்ற 69 சதவிகித இட ஒதுக்கீட்டில் எந்த வித சமரசத்திற்கும் இடமில்லை என்ற நிலைப்பாட்டில், இந்த அரசு அசையாமல் – ஆடாமல் – உறுதியாக நிற்க வேண்டும் என்பதைத் தான் திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. ஆகவே, உங்களை நான் கேட்டுக்கொள்ள விரும்புவது உடனே இதனைத் தெளிவுபடுத்தி, மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியலை உடனடியாக வெளியிட்டு மாணவர்கள் விரைவில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவக்கல்வி பயிலுவதற்கான ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கிடவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். அதுமட்டுமல்ல, நான் இன்னும் இந்த அரசை கேட்டுக்கொள்ள விரும்புவது, உடனடியாக தமிழகத்தில் இருக்கக்கூடிய அங்கீரகரிக்கப்பட்டிருக்கக்கூடிய அனைத்துக்கட்சி கூட்டத்தையும் கூட்டி அதில் விவாதித்து அதன் மூலமாக ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும், என்று இந்த அரசை வலியுறுத்தி தங்கள் மூலமாகக் கேட்டு அமர்கின்றேன்.