தென்பெண்ணையில் தொடரும் மணல் கடத்தல்!
விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில், விதிகளை மீறி பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் அள்ளப்படுவது தொடர்கிறது. நீராதாரத்தையும், விவசாயத்தையும் பாதுகாக்கும் பொருட்டு,


விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில், விதிகளை மீறி பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் அள்ளப்படுவது தொடர்கிறது. நீராதாரத்தையும், விவசாயத்தையும் பாதுகாக்கும் பொருட்டு, இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகளும், இயற்கை வள பாதுகாப்பு அமைப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையையொட்டிய பகுதிகளில் பல ஆண்டுகளாக மணல் வளம் சுரண்டப்படுவதால், நிலத்தடி நீராதாரம் குறைந்ததுடன், விவசாயமும் கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக, விழுப்புரம் அருகே அரசமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் மணல் திருட்டு, கடத்தல் பகிரங்கமாக தொடர்கிறது.
இதன் காரணமாக, விவசாயத்தை பிரதானமாக நம்பியுள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையையொட்டிய பகுதிகளிலும், கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியிலும் நீராதாரம் அதலபாதாளத்துக்குச் சென்றதால், காய்கறி, நெல், வேர்க்கடலை, மரவள்ளி, கரும்பு உள்ளிட்ட அத்தியாவசிய பயிர்கள் சாகுபடி கேள்விக்குறியாகி வருகிறது. பலர் விவசாயத்தை கைவிட்டு மாற்றுத் தொழிலை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அந்தப் பகுதி விவசாயிகள், தென்னக இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்கத் தலைவர் பா.சிவா உள்ளிட்டோர் கூறியதாவது:
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே தென்பெண்ணை ஆற்றில் எனதிரிமங்கலத்தில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. அங்கே மணல் எடுக்கப்பட்டு வரும் நிலையில், எதிர்புறத்தில் விழுப்புரம் மாவட்டம், அரசமங்கலம் பகுதியில் சிலர் இயந்திரங்களை வைத்து, சட்டத்துக்குப் புறம்பாக பல மாதங்களாக லாரிகளில் மணல் திருடி, கடத்தி வருகின்றனர். மேலும், இரவு நேரங்களிலும் லாரிகளில் திருட்டுத்தனமாக மணல் அள்ளி வருகின்றனர்.
இதுதொடர்பாக அளித்த புகாரின்பேரில், வளவனூர் காவல் நிலையத்தினர் சில லாரிகளை பறிமுதல் செய்தனர். எனினும், தென்பெண்ணையாற்றில் விதிகளை மீறி தொடர்ச்சியாக மணல் அள்ளப்பட்டு வருகிறது. இதனால் விழுப்புரம், பண்ருட்டி சுற்றுப்பகுதிகளில் நிலத்தடி நீராதாரம் வெகு ஆழத்துக்குச் சரிந்து, விவசாயத்துக்கு போதிய தண்ணீரின்றி பயிர்கள் கருகி வருகின்றன.
எனதிரிமங்கலம் மணல் குவாரியில் ஆண்டுக்கு 4.80.0-150.88 ஹெக்டேர் பரப்பளவிலும், ஒரு மீட்டர் ஆழத்தில் மட்டும்தான் மணல் எடுப்பதற்கு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், அந்த விதியை மீறி பல ஹெக்டேர் பரப்பளவில், 5 மீட்டர் ஆழத்துக்கும் மேலாக மணல் எடுக்கப்படுகிறது.
ஏற்கெனவே, விழுப்புரம், கடலூர் ஆகிய இரு மாவட்டப் பகுதிகளிலும், அருகருகே உள்ள கண்டரக்கோட்டை, பிடாகம், பேரங்கியூர், திருப்பாச்சனூர் உள்ளிட்டப் பகுதிகளில் குவாரிகள் பல ஆண்டுகளாக அமைத்து, தரை தெரியும் அளவுக்கு மணல் வளம் சுரண்டப்பட்டு விட்டது. தற்போது, மேலும், அரசு குவாரி மூலம் விதிகளை மீறி அதிகளவில் மணல் எடுக்கப்படுவதுடன், எதிர்புறத்திலும் அனுமதியின்றி பலர், திருட்டுத்தனமாக மணல் எடுத்து வருகின்றனர்.
அந்தப் பகுதியில் அரசு விதிகளை மீறி அதிகளவில் மணல் எடுத்துள்ளது பொதுப் பணித் துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தற்போது தெரிய வந்துள்ளது.
விழுப்புரம் மாவட்ட எல்லையில், விதிகளை மீறி மணல் சுரண்டலை தடுத்து நிறுத்திட, கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். மணல் கடத்தல் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, இயற்கை வளத்தை மீட்பதுடன், நிலத்தடி நீராதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியனிடம் நேரில் மனு அளித்துள்ளோம் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...