ஒரு நாட்டின் ஜனநாயகம் எந்த வகையிலும் வளைக்க முடியாமலும், சிதைக்க முடியாமலும் இருந்தால் மட்டும் தான் அங்கு ஆரோக்கியமான அரசியல் நிலவுவதை உறுதி செய்ய முடியும். கர்நாடகத்தில் நடைபெறும் நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும் போது, அங்கு ஆரோக்கியமான அரசியல் நிலவவில்லை என்பதை உறுதி செய்ய முடியும். சட்டப்பேரவைத் தேர்தலில் கோடிக்கணக்கில் முதலீடு செய்து சட்டப் பேரவை உறுப்பினரான எவர் ஒருவரும், அந்த பதவியிலிருந்து விலகத் துணிய மாட்டார்கள். ஆனால், சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு ஓராண்டு மட்டுமே ஆகும் நிலையில், 13 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுகிறார்கள் என்றால், அதன் பின்னணியில் அவர்களுக்கு எதோ பெரிய லாபம் இருப்பதாகத் தான் பொருளாகும். அந்த லாபம் எது? என்பது கர்நாடக அரசியலை கூர்ந்து கவனிக்கும் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அந்த சர்ச்சைகளுக்குள் செல்ல நான் விரும்பவில்லை. அதற்கு அவசியமுமில்லை.