மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

7 பேர் விடுதலையில் மீண்டும் பின்னடைவு: கைவிரித்தது சென்னை உயர் நீதிமன்றம்

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து ஆளுநர் முடிவெடுக்க உத்தரவிடக் கோரிய நளினியின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

News image
Updated On :18 ஜூலை 2019, 5:18 am

DIN


சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து ஆளுநர் முடிவெடுக்க உத்தரவிடக் கோரிய நளினியின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரும் தமிழக அமைச்சரவையின் தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை விசாரணைக்கு ஏற்பது தொடர்பாக இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.

இந்த நிலையில், மனுவை ஏற்பது தொடர்பாக இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், ஆளுநர் என்பவர் அதிகாரம் கொண்டவர், அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்ற அரசின் வாதத்தை ஏற்றுக் கொள்வதாகவும், நளினியின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி மனுவை தள்ளுபடி செய்வதாகவும் கூறினர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை கைதியான நளினி தாக்கல் செய்த மனுவில், முன்னாள் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வருகிறேன். நான் எனது கணவர் ஸ்ரீகரன் என்ற முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதியன்று முடிவு செய்து தமிழக ஆளுநருக்குப் பரிந்துரை செய்தது. பல மாதங்கள் கடந்து பின்னரும் அந்த தீர்மானத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது இந்திய அரசியல் சாசனத்துக்கு விரோதமானது.

எனவே, 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், ஆளுநருக்கு உத்தரவிடுமாறு வழக்கு தொடர முடியாது என வாதிட்டார். 

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நளினி தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் எம்.ராதாகிருஷ்ணன், அரசியல் சாசன அதிகாரம் கொண்ட ஆளுநர் அமைச்சரவையின் பரிந்துரை மீது கடந்த 8 மாத காலமாக நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது. எனவே அமைச்சரவையின் பரிந்துரையைப் பரிசீலிக்க உத்தரவிடக் கோரி வழக்குத் தொடர மனுதாரருக்கு உரிமை உள்ளது' எனக் கூறி வாதிட்டார். 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி தள்ளுபடி செய்வதாக இன்று தீர்ப்பளித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.