படுகொலை செய்யப்பட்ட நெல்லை முன்னாள் மேயர் உடலுக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி

செவ்வாயன்று படுகொலை செய்யப்பட்ட நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
படுகொலை செய்யப்பட்ட நெல்லை முன்னாள் மேயர் உடலுக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி
Published on
Updated on
1 min read

நெல்லை: செவ்வாயன்று படுகொலை செய்யப்பட்ட நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட அவரது கணவர் மற்றும் பணியாள் என மூன்று பேர் படுகொலை செய்ப்பட்டதையொட்டி, அவர்களின் உடல்களுக்கு நேரில்சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின்னர், செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசிய விவரம் பின்வருமாறு:

நெல்லை மாவட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அமைப்பில் சிறந்த செயல் வீரராக விளங்கியவர்  உமா மகேஸ்வரி. அவர் 1996-ஆம் ஆண்டு, நான் சென்னை மாநகரத்தின் மேயராக இருந்த போது, நெல்லை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக இருந்து மாநகர மக்களுக்கு பல சிறப்பான பணிகளை நிறைவேற்றியிருக்கின்றார். கட்சிப் பாகுபாடின்றி அரசியலுக்கு அப்பாற்பட்டு எல்லோரிடத்திலும் நன்மதிப்பினைப் பெற்றிருந்தவர் உமா மகேஸ்வரி.

நேற்றைய தினம் அவர் எதிர்பாராத நிலையில், யாரும் நினைத்துப் பார்க்க முடியாத சூழ்நிலையில் அவர் மட்டுமல்லாமல் அவரது கணவர், அந்த வீட்டிலிருந்த பணியாள் உள்ளிட்டோர் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இந்த ஆட்சியில் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நாள்தோறும் வந்துகொண்டிருக்கின்றது. மேலும், இதற்கு ஒரு முடிவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றது.

முதலில் இந்தப் படுகொலைக்கு காரணமானவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய தண்டனை கொடுப்பதற்கு இந்த அரசு அதற்கான முயற்சியில் முழுமையாக – உண்மையாக ஈடுபடவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன். உமா மகேஸ்வரி அவர்களையும், அவரது கணவரையும் இழந்து வாடிக்கொண்டிருக்கக்கூடிய அவருடைய குடும்பத்தாருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை நான் தெரிவித்துக்கொள்கின்றேன். 

இவ்வாறு அவர் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com