சமீபத்தில் மத்திய பாடத் திட்டத்தின் அடிப்படையில் 12 ஆம் வகுப்பிற்கு வெளியிடப்பட்ட ஆங்கில புத்தகத்தில் தமிழை விட சமஸ்கிருதம் தொன்மையான மொழி என்று குறிப்பிடப்பட்டிருப்பது தமிழக மக்களியே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், தமிழ் மொழி கி.மு. 300 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவும், சமஸ்கிருத மொழி கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான மொழியாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இத்தகைய வரலாற்று திரிபு வாதங்களை மத்திய அரசுக்கு பின்னால் இருந்து ஆர்.எஸ்.எஸ். சனாதன பரிவாரங்கள் செய்து வருகிறார்கள். இந்த பாடப் புத்தகங்களைத் தயாரிக்கிற பணியில் ஆர்.எஸ்.எஸ். பரிந்துரையின் பேரில் வகுப்புவாத உணர்வு கொண்ட கல்வியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். இதன்மூலம் சமஸ்கிருத மொழியை திணித்து தமிழர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத கலாச்சார படையெடுப்பை பா.ஜ.க. நிகழ்த்தி வருகிறது.