முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே அம்பலமான மோடி அரசின் சுயரூபம்: கே.எஸ்.அழகிரி சாடல் 

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற கொள்கையில் நம்பிக்கையுள்ள பா.ஜ.க.வின் சுயரூபம் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை அமைந்த உடனேயே அமபலமாகியுள்ளது... 
முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே அம்பலமான மோடி அரசின் சுயரூபம்: கே.எஸ்.அழகிரி சாடல் 
Published on
Updated on
1 min read

சென்னை: ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற கொள்கையில் நம்பிக்கையுள்ள பா.ஜ.க.வின் சுயரூபம் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை அமைந்த உடனேயே அமபலமாகியுள்ளது என்று மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி  விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஞாயிறன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற கொள்கையில் நம்பிக்கையுள்ள பா.ஜ.க.வின் சுயரூபம் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை அமைந்த உடனேயே அமபலமாகியுள்ளது. இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போகிரியால் நிஷாங்கியிடம் புதிய தேசிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பல்வேறு அம்சங்கள் தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை உருவாக்கியிருக்கின்றன.

புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையின்படி 6 ஆம் வகுப்பு முதல் இந்தி மொழி பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாட்டின் பரந்த நிலபரப்பு மற்றும் காலாச்சாரத்தை மாணவர்கள் அறிய மும்மொழி கொள்கையை கட்டாயமாக்கவேண்டும் என்று இந்த அறிக்கை கூறுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை இந்தி மொழி திணிப்பை நீண்டகாலமாக எதிர்த்து போராடி தடுத்த வரலாறு உண்டு.

மேலும் புதிய கல்விக் கொள்கையில் பள்ளிக் கல்வியை நான்கு பிரிவுகளாக பிரித்தல், கல்லூரிகள் போல 9 முதல் 12 ஆவது வகுப்பு வரை 4 ஆண்டுகளில் 8 செமிஸ்டர் தேர்வுகள் நடத்தப்படவேண்டும், தேசிய கல்வி ஆணையம் அமைத்தல், பண்பாட்டு கலாச்சார ஒற்றுமையை வளர்க்க பெரிதும் உதவிய சமஸ்கிருத மொழியை அனைவரும் பயில வாய்ப்புகளை உருவாக்குதல் என்ற செயல்திட்டங்கள் அதில் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்படுகிற நிலை இன்று ஏற்ப்பட்டிருக்கிறது. தமிழக மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் தற்ப்போது நடைமுறையில் உள்ள 10 பிளஸ் 2 திட்டத்தை மாற்றி அமைப்பது கடுமையான விளைவுகளை ஏற்ப்படுத்தும். பொதுவாக கல்வி என்பது பொது பட்டியலில் இருப்பதால் இத்தகைய மாநில நலன்களுக்கு விரோதமான நடவடிக்கைகளை மத்திய அரசு அத்துமீறி எடுக்கிறது. மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் எடுக்கிற இத்தகைய முடிவுகளை தமிழக அரசு துணிவுடன் எதிர்க்கவேண்டும். இதை எதிர்க்கிற துணிவை அ.தி.மு.க. அரசு பெற்றிருக்கிறதா என தெரியவில்லை.

நேருவின் உறுதிமொழிக்கு சட்ட பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதையும் மீறி புதிய கல்விக் கொள்கை என்ற போர்வையில் மும்மொழி திட்டத்தை புகுத்தி இந்தி மொழியை கட்டாயப்படுத்தி திணிக்க முயன்றால் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக கடுமையான போராட்டங்களை நடத்தவேண்டி வரும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com