ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சென்னையில் அதிநவீன முறையில் சுத்திகரிக்கப்படும் கழிவுநீர்: பொதுமக்கள்- தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்த முடிவு

இந்தியாவில் முதல் முறையாக சிங்கப்பூரைப் போன்று சென்னையில் எதிர் சவ்வூடு பரவுதல் முறை மூலம் கழிவுநீர் அதிகளவு சுத்திகரிக்கப்படவுள்ளது.

News image
Updated On :11 ஜூன் 2019, 5:21 am

இந்தியாவில் முதல் முறையாக சிங்கப்பூரைப் போன்று சென்னையில் எதிர் சவ்வூடு பரவுதல் முறை மூலம் கழிவுநீர் அதிகளவு சுத்திகரிக்கப்படவுள்ளது. இதற்காக கோயம்பேடு, கொடுங்கையூரில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
 இதையடுத்து வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்த தண்ணீர் தொழிற்சாலைகளுக்கும், பொதுமக்களின் பயன்பாட்டுக்கும் வழங்கப்படும் என சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை கோயம்பேடு, கொடுங்கையூரில் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து செப்டம்பர் மாதம் ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுகோட்டையில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தேவையான 4.5 கோடி லிட்டர் தண்ணீர் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியம் வழங்கி வருகிறது. அதேபோன்று மணலியில் உள்ள பெட்ரோலியப் பொருள்கள் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு தேவையான 4.5 கோடி லிட்டர் தண்ணீர் மீஞ்சூரில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
 4 இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள்: போதுமான குடிநீர் வீடுகளுக்கே வழங்க முடியாத நிலையில், தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் வழங்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதனை மாற்றி அமைக்கவும், பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கழிவுநீரைச் சுத்திகரிக்கவும் புதிய திட்டத்தை சென்னை குடிநீர் வாரியம் முடிவு செய்து செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. இதற்காக கோயம்பேடு, கொடுங்கையூர், நெசப்பாக்கம், பெருங்குடி ஆகிய 4 இடங்களில் கழிவு நீரைச் சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் கோயம்பேடு, கொடுங்கையூர் ஆகிய 2 இடங்களிலும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது.
 இது குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியது: எதிர் சவ்வூடு பரவுதல் முறை மூலம் கழிவுநீரைச் சுத்திகரித்து மூன்றாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை விற்பனை செய்யவுள்ளோம். இதற்காக கோயம்பேட்டில் 9 ஏக்கரில் ரூ.396 கோடியிலும், கொடுங்கையூரில் 9 ஏக்கரில் ரூ.235 கோடியிலும் அதிநவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் சில வாரங்களில் முடிவடையவுள்ளது.
 குழாய்கள் பதிக்கும் பணி: இதையடுத்து கோயம்பேடு மற்றும் கொடுங்கையூர் பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பெறப்படும் தண்ணீர் தொழிற்சாலைகளுக்கு மாற்று ஏற்பாடாக வழங்கப்பட உள்ளது. இதற்காக கோயம்பேட்டில் இருந்து ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுகோட்டை, சிப்காட் சுற்றியுள்ள பகுதிகளுக்கு குழாய்கள் பதிக்கும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அதேபோன்று கொடுங்கையூரில் இருந்து மணலியில் உள்ள பெட்ரோலிய பொருள்கள் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு குழாய்கள் பதிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு தொழிற்சாலைகளுக்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டால், தற்போது தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் குடிநீரை பொதுமக்களுக்கு வழங்க முடியும்.
 குடிப்பதற்கும் உகந்தது: சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் குடிக்க கூட உகந்ததாகதான் உள்ளது. இதில் எந்த வித மாற்றத்தையும் பார்க்க முடியாது. கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து பெறப்படும் குடிநீரை விட, கழிவு நீரை சுத்திகரிக்கும் நிலையங்களில் இருந்து பெறப்படும் தண்ணீர் அவ்வளவு தூய்மையாகவே இருக்கும். ஆனால் சுத்திகரிக்கப்படும் கழிவுநீரை குடிக்கும் அளவுக்கு மக்கள் இன்னும் மனதளவில் தயாராகவில்லை.
 சென்னை மாநகருக்கு தினமும் 50 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. அதே அளவுக்கு கழிவு நீரும் சேகரிக்கப்படுகிறது. இதனை சுத்திகரிக்கும் போது 80 சதவீதம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கிடைக்கிறது. கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து கடல் தண்ணீரை குடிநீராக்குவதற்கு ஆகும் செலவை விட கழிவு நீரில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட நீர் தயாரிக்க 50 சதவீதம் செலவு குறைவாக இருப்பதுடன், தண்ணீரும் நன்றாகவே இருக்கிறது.
 சிங்கப்பூரைப் போன்று... கோயம்பேடு, கொடுங்கையூரைத் தொடர்ந்து நெசப்பாக்கம் மற்றும் பெருங்குடியில் அமைக்கப்பட்டு வரும் சுத்திகரிப்பு நிலைய பணிகளும் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இதன் மூலம் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு தொழிற்சாலைகளுக்கு வழங்க முடியும். தற்போது தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் குடிநீர், முழுவதும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திருப்பி விட முடியும் என்ற நிலை உருவாகும்.
 இந்த நவீன முறையில் சுத்திகரிக்கப்படும் தண்ணீர்தான் சிங்கப்பூரில் குடிநீர் உள்ளிட்ட அனைத்துத் தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது என்றனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.