மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு: உத்தரவு பிறப்பிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு 

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பான வழக்கில், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

News image
Updated On :1 மார்ச் 2019, 2:49 pm

DIN

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பான வழக்கில், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை ரத்து செய்து, ஆலைக்கு மீண்டும் மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்புகளை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சு வாயுவின் காரணமாக நோய் பரவுவதால், ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அந்த மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். 

இந்த நிலையில் கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு உத்தரவின்பேரில் கடந்த 2018-ஆம் ஆண்டு மே 28-ஆம் தேதி சீல் வைக்கப்பட்டது. மேலும் ஆலைக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா நிறுவனம் தில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு ஒன்றை அமைத்து விசாரணை மேற்கொண்டது. அதன்படி தருண்அகர்வால் குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின்படி தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையை 15 நாள்களுக்குள் திறக்க வேண்டும் என கடந்த ஆண்டு டிசம்பரில் உத்தரவிட்டது.

தமிழக அரசு இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதே போன்று வேதாந்தா நிறுவனமும் ஆலையைத் திறக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உத்தரவிடும் அதிகாரம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு இல்லை. இதுகுறித்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என தீர்ப்பளித்தது. 

இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவு தவறானது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளது என்பதற்கு ஆதாரப்பூர்வமான தகவல்களும் தமிழக அரசிடம் இல்லை. இந்த விவகாரத்தில் எங்களது நிறுவனத்துக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை. அனைத்து விதமான விதிமுறைகளையும் பின்பற்றியே ஸ்டெர்லைட் நிறுவனம் செயல்படுகிறது.  எனவே, ஆலையை மூடி சீல் வைத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவு சட்ட விரோதமானது. எனவே, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை ரத்து செய்து, ஆலைக்கு மீண்டும் மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்புகளை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த மனு வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆலை நிர்வாகம், அரசுத் தரப்பு, உள்ளிட்ட தரப்பினரின் வாதத்தைக் கேட்ட பிறகு, இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க இயலாது என்று நீதிமன்றம் மறுத்து விட்டது.      

அதேநேரம் வழக்கு குறித்து தமிழக அரசு, மாசு கட்டுப்பாட்டு வாரியம், மின் வாரியம் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.