சமூக வலைதளங்களில் தனக்கு எதிரான பிரசாரம்?: ஸ்டாலின் சுளீர் பதில்  

சமூக வலைதளங்களில் தனக்கு எதிரான பிரசாரம் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகிறதா? என்ற கேள்விக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் தனக்கு எதிரான பிரசாரம்?: ஸ்டாலின் சுளீர் பதில்  

சென்னை: சமூக வலைதளங்களில் தனக்கு எதிரான பிரசாரம் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகிறதா? என்ற கேள்விக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் உள்ள கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடக்கூடிய தொகுதிகளின் பட்டியலை வெள்ளியன்று மதியம் வெளியிட்டார்.  

அதன்பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து அவர் கூறியதாவது

விசிக எந்த சின்னத்தில் போட்டியிடும் என்பதை வர்கள் கட்சியின் சார்பில் வேட்பாளரை அறிவிக்கின்ற போது, அதை அவர்கள் தெரிவிப்பார்கள்.

தி.மு.க தனியாக தேர்தல் அறிக்கையை தயாரித்துக் கொண்டிருக்கின்றது. தற்போது அந்தப் பணிகள் முடிவடையக்கூடிய சூழ்நிலைக்கு வந்திருக்கிறது. இன்னும் 5 நாட்களுக்குள் முறையாக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.

தி.மு.க வின் வேட்பாளர் பட்டியல் வருகின்ற 17ம் தேதி வெளியிடப்படும்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒட்டுமொத்தமாக தி.மு.க தேர்தல் அறிக்கை தரப்படும். அதேபோல், 18 தொகுதிக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல் வரப்போகின்றது அதற்கும் தனியாக தயாரிக்கப்பட்டு அதுவும் முறையாக வழங்கப்படும்.

கழகத் தலைவர்: நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படுகின்ற போது 18 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தி.மு.க வெளியிடும்.

நேற்றைய முன்தினம் நாகர்கோவிலில் பிரச்சாரம் நடைபெற்றது போல திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பிரச்சாரத்தை மேற்கொண்டது போல இனி தொடரும்.

அனைத்தும் தயாரானதும் எனது பிரச்சாரப் பயணம் குறித்த அறிவிப்பு முறையாக வெளியிடப்படும்.

சமூக வலைதளங்களில் எனக்கு எதிரான ஒரு பிரசாரம் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகிறது. அதற்கு நிச்சயம் பதிலடி கொடுக்கக்கூடிய வகையில் எங்களது பிரச்சாரம் அமையும்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் வருகின்ற தேர்தலில் எதிரொலிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது. காரணம் ஆளுங்கட்சியே, குற்றவாளிக்கு துணை நின்றுகொண்டிருக்கின்றது. அதை எதிர்த்து பொதுமக்கள் போராடுகின்றார்கள், மாணவர்கள் போராடுகின்றார்கள், அரசியலுக்கு அப்பாற்பட்டு பல போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது.

அதனை, திசை திருப்ப வேண்டும் என்பதற்காகத்தான் என்னுடைய மருமகன் சபரீசன் மீது வழக்கு பதிவு செய்திருக்கின்றார்கள். என்னுடைய தூண்டுதலின் பேரில் தான் இவை அனைத்தும் நடந்து கொண்டிருக்கின்றது என்று புகார் அளித்திருக்கிறார்கள். எனவே, சட்ட ரீதியாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளேன் நீதிமன்றத்தையும் இது சம்பந்தமாக நாட போகின்றேன்.

மீதமிருக்கும் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்பதற்காகத்தான் நீதி மன்றத்தை நாடி இருக்கின்றோம். நீதி மன்றத்தைப் பொறுத்த வரையில் நடத்த வேண்டும் என்று சொல்லியிருக்கின்றார்கள். ஆனால், தேர்தல் கமஷன் சார்பில் ஆஜர் ஆனவர்கள் 2 வார காலம் நேரம் கேட்டு வாங்கியிருக்கின்றார்கள். தொடர்ந்து பார்ப்போம். நடத்த வேண்டும் என்பது தான் எங்களுடைய நோக்கம். நடத்தக்கூடாது என்பது ஆளும் கட்சியில் இருக்கக்கூடியவர்களின் விருப்பம். அதேபோல் மத்தியில் இருக்கக்கூடிய அரசினுடைய நிலை. காரணம் அது நடந்தால் தமிழ்நாட்டில் இப்போது நடந்து கொண்டிருக்கின்ற ஆட்சி இருக்காது. அதற்காக, இது திட்டமிட்டு நடத்தக்கூடிய ஒரு சதி அதை முறியடிப்பதற்குத் தான் நீதிமன்றத்திற்கு நாங்கள் சென்றுள்ளோம்.

என்ன செய்தாலும், மாநிலத்தில் இங்கிருக்கக்கூடிய ஆட்சியை, மத்தியில் இருக்கக்கூடிய ஆட்சியை அப்புறப்படுத்துவதற்கு தமிழ்நாட்டு மக்கள் தயாராக இருக்கின்றார்கள். அந்த பாதையை நோக்கி தான் நாங்களும் சென்று கொண்டிருக்கின்றோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com